தெலுங்கானாவில் சோகம்: மருத்துவமனையில் தீ விபத்து - 2 பச்சிளம் குழந்தைகள் பலி

25 பச்சிளம் குழந்தைகள் காயமடைந்தன.
தெலுங்கானாவில் சோகம்: மருத்துவமனையில் தீ விபத்து - 2 பச்சிளம் குழந்தைகள் பலி
Published on

ஐதராபாத்,

தெலுங்கானாவில் உள்ள அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தன.

தெலுங்கானா மாநிலம் அடிலாபாத் மாவட்டத்தில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் புதிதாக பிறந்த குழந்தைகளுக்கென சிறப்பு வார்டு செயல்பட்டு வருகிறது. இந்த வார்டில் புதிதாக பிறந்த பச்சிளம் குழந்தைகள் டாக்டர்கள் கண்காணிப்பிற்காக வைக்கப்பட்டிருந்தன.

தீ விபத்து - 2 குழந்தைகள் உயிரிழப்பு

இந்நிலையில், இந்த வார்டில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவ ஊழியர்கள் குழந்தைகள் வார்டில் இருந்த பச்சிளம் குழந்தைகளை காப்பாற்ற முயன்றனர். ஆனாலும், இந்த தீ விபத்தில் சிக்கி பிறந்து சில நாட்களே ஆன 2 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தன. மேலும், 25 பச்சிளம் குழந்தைகள் காயமடைந்தன.

இதையடுத்து காயமடைந்த குழந்தைகள் அனைத்தும் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. தீ விபத்து குறித்து அறிந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் குழந்தைகளுக்கான சிறப்பு வார்டில் உள்ள ஏசி வெடித்து தீ விபத்தி ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளை, இந்த தீ விபத்தில் 2 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்திற்கு தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி இரங்கல் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com