

சிவமொக்கா,
கர்நாடகா மாநிலத்தில் குளவி கொட்டியதில் 8 வயது சிறுவன் உயிரிழந்தான். அவனது தந்தை படுகாயம் அடைந்தார்.
கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டம் சாகர் தாலுகா ஹெக்கோடு அருகே அட்டிசாரா பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மகன் நிச்சித் (வயது 8). இவன் அங்குள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் வீட்டின் பின்புறம் இருந்த வாழை மரத்தை வெங்கடேஷ் வெட்டினார். அப்போது அவருடன் சிறுவன் நிச்சித் சென்றான்.
இந்த நிலையில் வாழை மரத்தில் குளவி கூடு கட்டியிருந்ததாக தெரிகிறது. அந்த மரத்தை வெங்கடேஷ் வெட்டும்போது அந்த குளவி கூடு கலைந்தது. அப்போது நிச்சித் மற்றும் வெங்கடேசை குளவி கொட்டியது. இதில் அவர்கள் 2 பேரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் குளவிகளை விரட்டியடித்தனர். பின்னர் படுகாயம் அடைந்த 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் நிச்சித், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.
வெங்கடேசுக்கு அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சிவமொக்காவில் உள்ள மெக்கான் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சாகர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.