

சிவமொக்கா,
நீச்சல் பழக சென்றபோது ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டம் சாகர் தாலுகா ஆலஹள்ளி கிராமத்தை சேர்ந்த சண்முகா என்பவருடைய மகன் லேகன் (வயது 13). இதேபோல், கணேஷ் என்பவருடைய மகன் புனித் (11). இவர்கள் 2 பேரும் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு மற்றும் 5-ம் வகுப்பு படித்து வந்தனர்.
இந்நிலையில், கிராமத்துக்கு அருகில் உள்ள ஒசாகெரே ஏரிக்கு, நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், லேகன் மற்றும் புனித் ஆகிய 2 பேரும் நீச்சல் பழக சென்றனர். இந்நிலையில், ஏரியில் அனைவரும் இறங்கி குளித்து கொண்டிருந்தபோது, லேகன் மற்றும் புனித் கரையின் அருகில் நீச்சல் பழகினர். அப்போது, அவர்கள் 2 பேரும் நீச்சல் தெரியாமல் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளனர்.
அப்போது, நீச்சல் சரியாக தெரியாமல் ஆழமான பகுதிக்கு சென்றதால், அவர்களால் நீந்தி வெளியே வரமுடியவில்லை. இதனால் தண்ணீரில் மூழ்கி 2 சிறுவர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து, சிறுவர்கள் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்களும், உறவினர்களும் ஏரிப்பகுதிக்கு சென்று தேடினர்.
அப்போது சிறுவர்கள் 2 பேரின் உடல்களும் ஏரியில் மிதப்பதை கண்டு பெற்றோர்கள் மற்றும் உறவினர்களும் அதிர்ச்சி அடைந்து, கதறி அழுதனர். இதுகுறித்து, சாகர் புறநகர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில், அங்கு விரைந்து வந்த போலீசார், தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் உயிரிழந்த சிறுவர்களின் உடல்களை மீட்டனர்.
பின்னர், அவர்களின் உடல்களை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக சாகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து சாகர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விடுமுறை நாளில் நீச்சல் பழக சென்ற சிறுவர்கள் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.