

கான்பூர்
இளம்பெண் ஓட்டிய ஜீப் மோதியதில், மனைவிக்கு புடவை வாங்க ஸ்கூட்டரில் சென்றவர் பலியான சோகம் ஏற்பட்டு உள்ளது.
உத்தர பிரதேசத்தின் கான்பூர் நகரை சேர்ந்தவர் சந்தோஷ் சிங் சவுகான் (வயது 55). தீபாவளியை முன்னிட்டு, மனைவிக்கு புடவை வாங்க ஸ்கூட்டரில் சென்றுள்ளார். அப்போது சொகுசு ரக ஜீப் ஒன்றில் வந்த இளம்பெண் அவர் மீது மோதியுள்ளார்.
அதனுடன் நிற்காமல் அந்த ஜீப், பேராசிரியர் கைலாஷ் சவுகான் என்பவரின் வீட்டின் வளாக சுவர் மற்றும் ஜி.எஸ்.டி. கண்காணிப்பாளர் அனிதா மகாதேவனின் தோட்டத்திற்குள் புகுந்து நின்றது. அதில் இருந்த 2 பெண்கள் மற்றும் ஆண் ஒருவர், அந்த பகுதிக்கு வந்த மற்றொரு சொகுசு காரில் ஏறி தப்பி சென்றனர்.
இந்த சம்பவம் நடந்த பகுதியில் இருந்து 500 மீட்டர் தொலைவில் சந்தோஷ் சிங்கின் வீடு உள்ளது. புடவை வாங்கி விட்டு வீட்டுக்கு வருவதற்குள் விபத்து நடந்துள்ளது.
அந்த இளம்பெண் ஜீப் ஓட்டுவதற்கான பயிற்சியை பெற்று வந்துள்ளார் என கூறப்படுகிறது. இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.