

புதுடெல்லி,
ரெயில்வே துறையால் நாட்டின் அதிவிரைவு ரெயிலான டிரெயின் 18 வருகிற 29ந்தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கான நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
இந்த ரெயில் டெல்லி மற்றும் வாரணாசி நகரங்களை இணைக்கும். சென்னை ஒருங்கிணைந்த ரெயில் பெட்டி தொழிற்சாலையில் ரூ.100 கோடி செலவில் உருவான டிரெயின் 18 ரெயில் ஆனது மணிக்கு 180 கி.மீட்டர் வேகத்தில் செல்ல கூடியது. இதன் சோதனை ஓட்டம் இன்று நடந்தது. இதில் ரெயில் பெட்டி ஒன்றில் கல் வீசப்பட்டு உள்ளது.
இதுபற்றி ரெயில் பெட்டி தொழிற்சாலையின் பொது மேலாளர் சுதான்ஷு மனு டுவிட்டரில் கூறும்பொழுது, ரெயில் பெட்டி தொழிற்சாலையின் தலைமை வடிவமைப்பு பொறியாளர் ஸ்ரீனிவாஸ் ரெயில் பெட்டியில் இருந்துள்ளார். ரெயில் மணிக்கு 181 கி.மீட்டர் வேகத்தினை எட்டி சாதனை படைத்தது.
ரெயிலின் மீது மர்ம நபர் ஒருவர் கல்லை தூக்கி வீசியுள்ளார். இதில் கண்ணாடி ஒன்று உடைந்துள்ளது. அவரை பிடித்து விடுவோம் என நம்புகிறோம் என தெரிவித்துள்ளார்.
நாட்டில் சதாப்தி ரெயில்களுக்கு பதிலாக இயக்கப்படும் இந்த ரெயிலானது என்ஜின் இல்லாமல் இயங்கும் முதல் ரெயில் ஆகும். இதன் மீது நடந்த கல்வீச்சு சம்பவம் பற்றி விசாரணை நடந்து வருகிறது.