2 மணி நேரம் முன்னதாகவே புறப்பட்ட ரெயில்: பயணிக்கு ரூ.15,620 இழப்பீடு வழங்க உத்தரவு

நிர்வாகத்தின் தன்னிச்சையான முடிவுகளால் பயணிகள் பாதிக்கப்படக் கூடாது" என நுகர்வோர் குறைதீர் ஆணையம் திட்டவட்டமாகத் தெரிவித்தது.
2 மணி நேரம் முன்னதாகவே புறப்பட்ட ரெயில்: பயணிக்கு ரூ.15,620 இழப்பீடு வழங்க உத்தரவு
நுகர்வோர் குறைதீர் ஆணையம்
Published on: 

சண்டிகர்,

உரிய முன்னறிவிப்பின்றி ரெயில் 2 மணி நேரம் முன்னதாகவே புறப்பட்டுச் சென்றதால் ரெயிலைத் தவறவிட்ட பயணிக்கு, ரெயில்வே துறை மற்றும் ஐஆர்சிடிசி இணைந்து ரூ.15,620 இழப்பீடு வழங்க பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாகவே புறப்பட்ட ரெயில்

பயணி ஒருவர் தனது மனைவி மற்றும் மகளுடன் கோவாவின் மட்காவ் ரெயில் நிலையத்திலிருந்து டெல்லி ஹஸ்ரத் நிஜாமுதீன் செல்வதற்காக கடந்த 2024-ம் ஆண்டு ஜூன் 10-ம் தேதி, ரூ.10,620 மதிப்பில் 3 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்திருந்தார். அன்றைய தினம் ரெயில் புறப்படும் நேரத்திற்கு முன்பாகவே அவர்கள் ரெயில் நிலையத்திற்கு சென்றபோது, பருவமழைக் கால அட்டவணை மாற்றம் காரணமாக அந்த ரெயில் 2 மணி நேரம் முன்னதாகவே புறப்பட்டுச் சென்றது தெரியவந்தது.

விமானத்தில் பயணம் - ஆணையத்தில் புகார்

ரெயில் நேர மாற்றம் குறித்து தங்களுக்கு எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை எனக் கூறிய அந்தப் பயணி, வேறு வழியின்றி குடும்பத்துடன் டெல்லி செல்ல விமான டிக்கெட்டுகளை எடுத்துப் பயணித்தார். ரெயில்வே நிர்வாகத்தின் இந்த சேவைக் குறைபாட்டை எதிர்த்து, பெரோஸ்பூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் அவர் வழக்குத் தொடர்ந்தார்.

ரெயில்வே- ஐஆர்சிடிசி விளக்கம்

விசாரணையின்போது, பருவமழைக் கால அட்டவணை மாற்றம் இணையதளம் மற்றும் அறிவிப்புப் பலகைகளில் வெளியிடப்பட்டதாக ரெயில்வே தரப்பிலும், ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு மட்டுமே தங்களது பணி என்றும் ரெயில் நேர மாற்றத்திற்கும் தங்களுக்கு தொடர்பில்லை என்றும் ஐஆர்சிடிசி தரப்பிலும் வாதிடப்பட்டது.

ரூ.15,620 இழப்பீடு வழங்க உத்தரவு

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட ஆணையம், "பயணிகளுக்குத் தரமான மற்றும் சரியான நேரத்திலான சேவையைப் பெற முழு உரிமை உண்டு. நிர்வாகத்தின் தன்னிச்சையான முடிவுகளால் பயணிகள் பாதிக்கப்படக் கூடாது" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தது. இதையடுத்து, வடக்கு ரெயில்வே, கொங்கன் ரெயில்வே மற்றும் ஐஆர்சிடிசி ஆகியவை இணைந்து, டிக்கெட் கட்டணமான ரூ.10,620 மற்றும் மன உளைச்சல், வழக்குச் செலவுகளுக்கான இழப்பீடாக ரூ. 5,000 என மொத்தம் ரூ.15,620 அந்தப் பயணிக்கு வழங்க வேண்டும் என பெரோஸ்பூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவர் கிரண்ஜித் கவுர் அரோரா உத்தரவிட்டார்.

X