8 மணி நேரத்திற்கு முன்பு ரெயில் அட்டவணை.. தெற்கு ரெயில்வேயில் அமல்

8 மணி நேரத்திற்கு முன்பு முன்பதிவு அட்டவணை வெளியிடும் நடைமுறை தெற்கு ரெயில்வேயில் அமலுக்கு வந்தது.
சென்னை,
ரெயில்களில் முன்பதிவு செய்த பயணிகளுக்கு 4 மணி நேரத்திற்கு முன்பு அட்டவணை வெளியிடப்பட்டு வந்தது. இதனால், கடைசி நேரத்தில் முன்பதிவு உறுதியாகாத பயணிகள் சிரமத்தை சந்தித்து வந்தனர். எனவே, இந்த நடைமுறையில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என பயணிகள் ரெயில்வே துறைக்கு கோரிக்கை வைத்தனர்.
இதுகுறித்து கடந்த மாதம் மத்திய ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, அட்டவணை வெளியிடும் நடைமுறையை 4 மணி நேரத்திற்கு பதிலாக 8 மணி நேரத்திற்கு முன்பு வெளியிட வேண்டும் என உத்தரவிட்டார். அதன்படி, புதிய முன்பதிவு அட்டவணை வெளியிடும் நடைமுறையை ரெயில்வே வாரியம் வெளியிட்டது.
அதில், அதிகாலை 5 மணி முதல் மதியம் 2 மணி வரை புறப்படும் ரெயில்களுக்கான முன்பதிவு அட்டவணை, முந்தைய நாள் இரவு 9 மணிக்கு தயாரிக்கப்பட வேண்டும். மதியம் 2 மணி முதல் அடுத்த நாள் அதிகாலை 5 மணி வரை புறப்படும் ரெயில்களுக்கு 8 மணி நேரத்துக்கு முன்பாக முன்பதிவு அட்டவணை தயாரிக்கப்பட வேண்டும்.
இந்த நடவடிக்கை மூலம் காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணிகள் தங்களுடைய டிக்கெட்டின் நிலையை முன்கூட்டியே தெரிந்துகொள்ள முடியும். கடைசிநேர சிரமம் தவிர்க்கப்படும் என தெரிவித்தது. இந்த புதிய முன்பதிவு அட்டவணை வெளியிடும் நடைமுறை தெற்கு ரெயில்வேயில் நேற்று அமலுக்கு வந்தது.
8 மணி நேரத்திற்கு முன்பே அட்டவணை வெளியிடும் நடைமுறையை பின்பற்றுமாறு ரெயில்வே கோட்டங்களுக்கு தெற்கு ரெயில்வே வணிகப்பிரிவு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.