

ஸ்ரீநகர்,
தெற்கு காஷ்மீரில் சோபியான் மாவட்டத்தில் உள்ள டிராகாட் என்னும் கிராமத்தில் ஒரு வீட்டுக்குள் பதுங்கிருந்த பயங்கரவாதிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே கடந்த 1 ஆம் தேதி துப்பாக்கி சண்டை நடந்தது. இந்த தாக்குதலில் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தின் தளபதி இருவர் உள்பட 7 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதேபோல் சோபியான் மாவட்டத்தின் கச்டோரா என்னும் இடத்தில் நடந்த இன்னொரு துப்பாக்கி சண்டையில் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த சண்டையில் 3 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
கச்டோரா, டிராகாட், பேத் டயல்காம் ஆகிய இடங்களில் பயங்கரவாதிகளுக்கு எதிரான துப்பாக்கி சண்டை தீவிரமாக நடந்து கொண்டிருந்த நேரத்தில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நூற்றுக்கணக்கில் திரண்டு ராணுவத்தினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் வன்முறையில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதால் 4 பேர் உயிரிழந்தனர்.இதைத்தொடர்ந்து தெற்கு காஷ்மீர் பகுதி முழுவதும், வதந்தி பரவாமல் தடுக்க செல்போன், இணையதள சேவைகள் முடக்கப்பட்டது.
இந்நிலையில் பாதுகாப்பு காரணம் கருதி அனைத்து ரெயில் சேவைகளும் தொடர்ந்து 4 வது நாளாக ரத்துசெய்யப்பட்டன. தெற்கு காஷ்மீர் பகுதியின் ஸ்ரீநகர்-பானிஹால் இடையே இயங்கும் அனைத்து ரெயில்களும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் ரெயில்வே சொத்துகளின் பாதுகாப்பு கருதியே ரெயில் போக்குவரத்தை நிறுத்தியுள்ளோம். அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை இந்த பகுதிகளில் ரெயில்கள் இயக்கப்படாது என ரெயில்வே மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.