

புதுடெல்லி,
தி.மு.க. நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி. மக்களவையில், மத்திய கிராமப்புற வளர்ச்சித்துறை மந்திரி நரேந்திர சிங் தோமரிடம் கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் நஞ்சை மற்றும் புஞ்சை நில உடைமை ஆவணங்கள் முறைப்படுத்த எடுக்கப்பட்ட முயற்சிகள் என்னென்ன? என்பது குறித்து கேள்வி எழுப்பினார்.
இதற்கு மத்திய மந்திரி நரேந்திர சிங் தோமர் பதிலளித்து பேசியதாவது:-
2008-2009-ம் ஆண்டு முதலே நில உடைமை ஆவணங்களை கணினி மயமாக்க, ஒருங்கிணைந்த நில அளவீட்டு மேலாண்மை முறையை கடைப்பிடித்து பிழைகளை நீக்கவும், நஞ்சை மற்றும் புஞ்சை உடைமை ஆவணங்கள் உடனடியாக மக்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்குள் கிடைக்கும் வகையிலும், வருமானத் துறை அதிகாரிகள் இடையூறு இல்லாமல் உடனே கணக்குகளை பெறவும் அனைத்து மாநிலங்களும் உரிய முயற்சிகளை எடுத்து வருகின்றன.
நிலம் மாநிலப் பட்டியலில் இருப்பதால், நில உடைமை ஆவணங்களை கணினி மயமாக்கவும், வருமானத் துறை அதிகாரிகளை பயிற்றுவிக்கவும், நவீன நில உடைமை தரவுகள் அறைகளை அமைக்கவும், தேவையான நிதி உதவியை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அளித்து வருகின்றன. காணொலிக் காட்சிகள் வாயிலாக அனைத்து மாநிலங்களுடன் மத்திய அரசு தொடர்பு கொண்டு நில உடைமை ஆவணங்களை கண்காணித்து வருகிறது. இவ்வாறு அவர் பதில் அளித்தார்.