ஆக்சிஜன் வினியோகத்தை அதிகரிக்க 500 டேங்கர் லாரி டிரைவர்களுக்கு பயிற்சி - மத்திய உள்துறை அமைச்சகம் தகவல்

ஆக்சிஜன் வினியோகத்தை பெருக்க புதிதாக தேர்வு செய்யப்பட்ட 500 டேங்கர் லாரி டிரைவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆக்சிஜன் வினியோகத்தை அதிகரிக்க 500 டேங்கர் லாரி டிரைவர்களுக்கு பயிற்சி - மத்திய உள்துறை அமைச்சகம் தகவல்
Published on

புதுடெல்லி,

மத்திய உள்துறை அமைச்சக கூடுதல் செயலாளர் பியூஸ் கோயல் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

நாட்டில் ஆக்சிஜன் வினியோகத்தை பெருக்க மத்திய உள்துறை அமைச்சகம் எண்ணற்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எதிர்கால தேவையை கருதி, 5 ஆயிரத்து 805 டன் திரவ மருத்துவ ஆக்சிஜனை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பணி நடந்து வருகிறது.

இவற்றில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து மட்டும் 3 ஆயிரத்து 440 டன் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. தற்போது, நாட்டில் ஆக்சிஜன் கையிருப்பு போதிய அளவு உள்ளது.

எங்கெங்கு ஆக்சிஜன் உள்ளதோ, அவற்றை இறக்குமதி செய்வதை விரைவுபடுத்தும் திட்டம் அமலில் இருக்கிறது. டேங்கர்களை எடுத்துச்செல்லும் நேரத்தை மிச்சப்படுத்த ரெயில்வே, விமானப்படை ஆகியவற்றின் சேவையும் பயன்படுத்தப்படுகிறது.

ஆக்சிஜன் நிரப்பப்பட்ட டேங்கர்களை விமானப்படை விமானங்களில் எடுத்துச்செல்ல முடியாது. எனவே, காலி டேங்கர்கள் மட்டும் விமானத்தில் கொண்டு செல்லப்படுகிறது. இந்தியாவுக்குள் 374 காலி டேங்கர்களும், வெளிநாடுகளில் இருந்து 81 டேங்கர்களும் விமானப்படை விமானங்களில் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

1,252 ஆக்சிஜன் சிலிண்டர்களும், 3 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களும், 835 ஆக்சிஜன் செறிவூட்டிகளும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. 157 ஆக்சிஜன் சிறப்பு ரெயில்கள் மூலமாக 637 டேங்கர்கள் நாடு முழுவதும் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

டேங்கர் லாரி டிரைவர்களையும் கொரோனா தாக்குவதால், திறமையான டிரைவர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகும். எனவே, புதிய டிரைவர்களை தேர்வு செய்து பயிற்சி அளிக்கும் பணி நடந்து வருகிறது. தற்போது, 500 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன்பிறகு, 2 ஆயிரம் டிரைவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

மத்திய, மாநில அரசு அதிகாரிகள் அடங்கிய காணொலி வாயிலான கொரோனா கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. நாடு முழுவதும் ஆக்சிஜன் கிடைப்பதற்காக மாநில அரசுகளுடன் மத்திய அரசு ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com