இறந்தவர்களின் வங்கி கணக்குகளில் உள்ள பணம்; வாரிசுகளிடம் ஒப்படைக்க வெளிப்படையான நடைமுறை - மத்திய அரசு தகவல்

உரிமை கோரப்படாத பணம் குறித்து யாருக்கேனும் பிரச்சினை இருந்தால், சட்டத்துக்குட்பட்டு உரிய அதிகாரிகளை அணுகலாம் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
இறந்தவர்களின் வங்கி கணக்குகளில் உள்ள பணம்; வாரிசுகளிடம் ஒப்படைக்க வெளிப்படையான நடைமுறை - மத்திய அரசு தகவல்
Published on: 

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டில் பத்திரிகையாளர் சுசேதா தலால் என்பவர் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது:- “இறந்தவர்களின் வங்கி, அஞ்சலக கணக்குகள், காப்பீடு ஆகியவற்றில் உள்ள பணம் குறித்து அவர்களின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு தெரிவது இல்லை. அப்படியே தெரிந்தாலும், அவர்கள் தேவையின்றி வழக்கு தொடர்ந்து பணத்தை மீட்க வேண்டி உள்ளது.

ஆகவே, வழக்கு நடத்த அவசியமின்றி, உரிமை கோரப்படாத பணத்தை மீட்க வெளிப்படையான வழிமுறையை உருவாக்க வேண்டும். இறந்தவர்களின் உரிமை கோரப்படாத பணம் குறித்த தகவல்களுடன் ரிசர்வ் வங்கி மேற்பார்வையில் ஒரு தரவுத்தளத்தை உருவாக்க உத்தரவிட வேண்டும்.” இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

ரூ.6,453 கோடி ஒப்படைப்பு

கடந்த 17-ந் தேதி, இந்த மனு மீதான விசாரணையின்போது, மத்திய அரசு சார்பில் ஆஜ ரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் என்.வெங்கடராமன், "வங்கிகள், அஞ்சலகங்கள், காப் பீட்டு நிறுவனங்கள், பரஸ்பர நிதியங்கள் ஆகியவற்றில் உரிமை கோரப்படாத பணத்தை இறந்தவர்களின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு விடுவிக்க வெளிப்படையான வழிமுறையை வகுத்துள்ளோம்.

இதன்படி, கடந்த மார்ச் மாதம்வரை 3 லட்சம் உரிமை கோரல்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இன்னும் 10 சதவீதம் மட்டுமே நிலுவையில் உள்ளது. ரூ.6 ஆயிரத்து 453 கோடி, வாரிசுகளிடம் ஒப்படைக்கப்பட்டது” என்று கூறினார்.

தீர்ப்பு

இதையடுத்து, சுப்ரீம் கோர்ட்டு தனது தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. இந்நிலையில், இவ்வழக்கில், நீதிபதிகள் விக்ரம்நாத், ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று தீர்ப்பு அளித்தது. நீதிபதிகள் கூறியதாவது:-

”மனுவில் எழுப்பப்பட்டுள்ள முக்கிய கவலைகள், அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைகள் மூலம் பெரும்பாலும் தீர்வு காணப்பட்டுள்ளன என்று கருதுகிறோம். எனவே, இந்த மனுவை நிலுவையில் வைத்திருப்பதில் அர்த்தம் இல்லை. அதிகாரிகள் அளித்த உறுதிமொழிகளை ஏற்றுக்கொண்டு, பதிவு செய்கிறோம். இனிமேலும் உரிமை கோரப்படாத பணம் குறித்து யாருக்கேனும் பிரச்சினை இருந்தால், சட்டத்துக்குட்பட்டு உரிய அதிகாரிகளை அணுகலாம்.”

இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

X