புதுச்சேரியில் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்

புதுச்சேரியில் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் தொடர்ச்சியாக, கிராமங்களுக்கு செல்லும் பேருந்துகள் முழுமையாக இயங்கவில்லை.
புதுச்சேரி,
புதுச்சேரியில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில், தமிழகம், ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் 100-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. புதுச்சேரியிலும் பேருந்து சேவை வழங்கப்படுகிறது.
இந்நிலையில், புதுச்சேரியில் போக்குவரத்து ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தியும், 7-வது ஊதிய குழு சம்பளம் வழங்க கோரியும் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஓட்டுநர்களின் போராட்டம் தொடர்ச்சியாக பல்வேறு பகுதிகளில் அரசு பேருந்துகள் ஓடவில்லை.
கிராமங்களுக்கு செல்லும் பேருந்துகள் முழுமையாக இயங்கவில்லை. இதனால், வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், தொழிலாளர்கள் என பொதுமக்களில் பல்வேறு தரப்பினரும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து உள்ளனர். இதனால், இன்று தொடங்கிய அவர்களுடைய போராட்டம் கோரிக்கை நிறைவேறும் வரை தொடரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதனை முன்னிட்டு பேருந்துகள் பணி மனையில் நிறுத்தப்பட்டு உள்ளன. பணி மனையின் முன்பு ஊழியர்கள் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், போலீசார் அந்த பகுதியில் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர்.
எனினும் புதுச்சேரியில், தனியார் மற்றும் தமிழக அரசு பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகின்றன.






