

புதுடெல்லி,
இந்திய வரலாற்று ஆவண விற்பனையில் உலக சாதனையாக மகாத்மா காந்தி கைப்பட எழுதிய கடிதங்கள் ரூ.16.2 கோடிக்கு ஏலம் போனது.
மகாத்மா காந்தி தனது நெருங்கிய கூட்டாளியும், சுதந்திர போராட்ட வீரருமான ஆனந்த் டி.ஹிங்கோராணிக்கு ஏராளமான கடிதங்களை எழுதியிருந்தார். ஆனந்த் டி. ஹிங்கோராணியின் மனைவி வித்யா மறைந்த பிறகு, அவருக்கு ஆறுதல் மற்றும் ஊக்கமளிக்கும் வகையில் மகாத்மா காந்தி இந்த கடிதங்களை எழுதியுள்ளார். பின்னர் இந்த கடித பரிமாற்றம் சுமார் 2 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்துள்ளது. பின்னாட்களில் இந்த கடிதங்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டு 'ஏ தாட் ஆப் த டே' என்ற பெயரில் புத்தகமாக வெளியிடப்பட்டது.
இந்த கடிதங்கள் குறித்து ஏல நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, மகாத்மா காந்தியின் இந்த கையெழுத்து பிரதியானது உண்மை. அகிம்சை, பிரம்மச்சரியம். உடைமை தவிர்த்தல், அச்சமின்மை, மத சமத்துவம், தீண்டாமை ஒழிப்பு, பிரார்த்தனை. ராமநாமம், சேவை. உழைப்பு, பசி, கடமை, சுயராஜ்யம், தார்மிக பொறுப்பு, மவுனம், மனசாட்சி, பற்றின்மை. சுய-உணர்தல், இறைவனை தேடுதல் ஆகியவற்றை பற்றி பேசுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹிங்கோராணி குடும்பத்தினரால் பல தலைமுறைகளாக பாதுகாக்கப்பட்ட மகாத்மா காந்தியின் இந்த கடிதங்கள் உண்மை, அகிம்சை, சேவை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகள் சார்ந்த 688 கையெழுத்து பிரதிகளின் தொகுப்பு ஒன்று, 'சாப்ரானார்ட்' நிறுவனம் நேற்று நடத்திய ஏலத்தில் ரூ.16.20 கோடிக்கு விற்பனையானது. இதன் மூலம் இந்திய வரலாற்று ஆவணங்களில் அதிக தொகைக்கு ஏலத்தில் விற்கப்பட்ட ஆவணமாக உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்த பிரதிகள் அனைத்தும் மகாத்மா காந்தி தனது கைப்பட எழுதிய கடிதங்கள் ஆகும்.
இது மட்டுமின்றி, மகாத்மா காந்தியுடன் தொடர்புடைய கடிதங்கள். கையெழுத்து பிரதிகள், புகைப்படங்கள், தனிப்பட்ட பொருட்கள் அடங்கிய 86 தொகுப்புகளும் ஏலத்தில் விடப்பட்டன. இதில் குறிப்பாக, கடவுள், பகவத் கீதை குறித்த காந்தியின் சிந்தனைகளை உள்ளடக்கிய, கையெழுத்து பிரதி, கடிதங்களை கொண்ட 'மெசேஜ் ஆன் காட் (கடவுள் குறித்த செய்தி) என்ற தொகுப்பு. ரூ.1.68 கோடிக்கு விற்பனையானது. இந்த ஏலத்தில் இடம்பெற்ற தனிப்பட்ட பொருட்களில், காந்தியின் 'பெட்டி ராட்டை' மற்றும் 2 கடிதங்கள் ஆகியவை அடங்கிய தொகுப்பு ரூ.1.02 கோடிக்கு விற்பனையானது. அதேபோல், காந்தி எழுதிக்கொண்டிருக்கும் நிலையில் எடுக்கப்பட்ட, அவரது கையொப்பம் இடப்பட்ட புகைப்படம் ரூ.78 லட்சத்துக்கும், பொருளாதார சுதந்திரம் குறித்த காந்தியின் கடிதங்கள், தந்தி செய்திகள், அஞ்சல் அட்டைகள் அடங்கிய தொகுப்பு ரூ.57.60 லட்சத்துக்கும் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.