10-வது மாடியில் இருந்து விழுந்த பெண்ணை காப்பாற்றிய மரக்கிளைகள்

மரக்கிளையில் தொங்கியபடி பயத்தில் உதவி கேட்டு அந்த பெண் சத்தம் போட்டார்.
மாடியில் இருந்து விழுந்த பெண்
Published on

பாண்டுப்,

10-வது மாடியில் இருந்து எதிர்பாராத விதமாக திடீரென கால் இடறி கீழே விழுந்த பெண் மரத்தின் கிளைகளுக்குள் சிக்கிக்கொண்டதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

மும்பை பாண்டுப் பகுதியில் உள்ள 'சன்சைன்' என்ற குடிசை மறுசீரமைப்பு குடியிருப்பு கட்டிடத்தின் 10-வது மாடியில் தனது குடும்பத்துடன் பெண் ஒருவர் வசித்து வருகிறார். நேற்று காலை அவர் எதிர்பாராத விதமாக திடீரென கால் இடறி 10-வது மாடியிலிருந்து கீழே விழுந்துள்ளார்.

மரக்கிளைகள்

இதில் அதிர்ஷ்டவசமாக கீழே இருந்த ஒரு அடர்ந்த மரத்தின் கிளைகளுக்குள் அவர் சிக்கிக்கொண்டார். 10-வது மாடி உயரத்திலிருந்து விழுந்த நிலையிலும் மரக்கிளைகள் அவரது வேகத்தை தடுத்ததால், அவர் அதிசயமாக உயிர் தப்பினார்.

மீட்பு

மரக்கிளையில் தொங்கியபடி பயத்தில் உதவி கேட்டு அந்த பெண் சத்தம் போட்டார். இது குறித்து அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், ராட்சத ஏணியை பயன்படுத்தி, மரக்கிளையில் சிக்கியிருந்த பெண்ணை பத்திரமாக மீட்டனர்.

கீழே விழுந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டிருந்ததால், அவர் உடனடியாக சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

மேலும் பாதிக்கப்பட்ட பெண் தற்கொலை செய்து கொள்ளும் முயற்சியில் கீழே குதித்தாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com