முத்தலாக் விவகாரம் பாலின சமத்துவம், சபரிமலை விவகாரம் பாரம்பரியம் தொடர்பானது -பிரதமர் மோடி

முத்தலாக் விவகாரம் பாலின சம்பத்துவம், சபரிமலை விவகாரம் பாரம்பரியம் தொடர்பானது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
முத்தலாக் விவகாரம் பாலின சமத்துவம், சபரிமலை விவகாரம் பாரம்பரியம் தொடர்பானது -பிரதமர் மோடி
Published on

புதுடெல்லி,

முத்தலாக் விவகாரம் மற்றும் சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி தொடர்பாக பிரதமர் மோடி பதில் அளித்துள்ளார். ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பிரதமர் மோடி பேட்டியளிக்கையில், முத்தலாக் மற்றும் சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதாவின் இரட்டை நிலைபாடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. பிரதமர் மோடி பதில் அளிக்கையில், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அடுத்தே நாங்கள் முத்தலாக் விவகாரத்தில் அவசரச்சட்டம் கொண்டு வந்தோம். இவ்விவகாரத்தில் அரசியலமைப்பின் கீழ் தீர்வு காண்போம் என எங்களுடைய தேர்தல் வாக்குறுதியிலே கூறியுள்ளோம்.

அதிகமான இஸ்லாமிய நாடுகள் முத்தலாக்கை தடை செய்துள்ளன. இது மதம் மற்றும் அதுதொடர்பான நம்பிக்கை சம்பந்தப்பட்ட விவகாரம் கிடையாது. பாகிஸ்தானிலும் முத்தலாக்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, இது பாலின சமத்துவ விவகாரமாகும். சமூக நீதி தொடர்பானது. இது ஒரு நம்பிக்கை தொடர்பான பிரச்சினை கிடையாது. எனவே இரண்டையும் தனியாக பாருங்கள், என கூறியுள்ளார்.

சபரிமலை விவகாரம் தொடர்பாக பேசுகையில், அனைவருக்கும் நீதி கிடைக்கும் என்ற கருத்தை இந்தியா கொண்டுள்ளது. தங்களுக்கென்று பாரம்பரிய விதிமுறைகளை கொண்ட கோவில்கள் இந்தியாவில் உள்ளது. அங்கு ஆண்களும் செல்ல முடியாது. சபரிமலை விவகாரத்தில் பெண் நீதிபதி ஒருவர் குறிப்பிட்ட கருத்தை தெரிவித்தார். அதனை முழுவதுமாக படிக்க வேண்டும், என்றார். சபரிமலை விவகாரத்தில் விசாரணை மேற்கொண்ட 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் இடம்பெற்ற பெண் நீதிபதி இந்து மல்ஹோத்ரா கேரளாவில் உள்ள சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களுக்கும் செல்ல அனுமதி அளிக்க முடியாது என்று தீர்ப்பளித்தார். இதனை பிரதமர் மோடி சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com