

அகர்தலா,
திரிபுராவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பாரதீய ஜனதா கட்சி ஆட்சியை கைப்பற்றியது. இதனை அடுத்து பிப்லாப் குமார் தேவ் முதல் மந்திரியாக பொறுப்பேற்றார். அவரது தலைமையிலான அமைச்சரவையில் 9 பேர் மந்திரிகளாக உள்ளனர்.
அதில், கூட்டணி கட்சியான திரிபுரா உள்ளூர் மக்கள் முன்னணியை சேர்ந்த 2 பேர் மந்திரிகளாகவும் உள்ளனர். இந்த நிலையில், கர்பூக் தொகுதியின் எம்.எல்.ஏ. பர்பா மோகன், சந்தை வழியே சென்றுள்ளார். அவரது வாகனம் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில், மோகனின் வாகனம் பலத்த சேதமடைந்தது. இந்த சம்பவத்தில் முன்னாள் மண்டல தலைவர் மற்றும் 2 தொண்டர்கள் என 3 பேர் காயமடைந்தனர். எம்.எல்.ஏ.வின் பாதுகாவலர் அவரை பாதுகாக்கும் வகையில் துப்பாக்கியால் வானை நோக்கி சுட்டார். அதன்பின் மோகனை பாதுகாப்பு மிக்க பகுதிக்கு அழைத்து சென்றார்.
இந்த தாக்குதல் சம்பவத்தினால் ஆத்திரமடைந்த பாரதீய ஜனதா தொண்டர்கள், திரிபுரா உள்ளூர் மக்கள் முன்னணி கட்சியின் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தினர். எனினும், பதற்றத்தினை தணிக்க அந்த பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர். எம்.எல்.ஏ. மோகன் தாக்கப்பட்டது பற்றி வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.