லாரி டிரைவர்களை கொன்று சரக்குகள் கொள்ளை: நாட்டிலேயே முதல் முறையாக 12 பேருக்கு தூக்கு தண்டனை; ஆந்திர கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

லாரி டிரைவர்களை கொன்று சரக்குகளை கொள்ளையடித்த வழக்கில் 12 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து ஆந்திர கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
லாரி டிரைவர்களை கொன்று சரக்குகள் கொள்ளை: நாட்டிலேயே முதல் முறையாக 12 பேருக்கு தூக்கு தண்டனை; ஆந்திர கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
Published on

லாரி டிரைவர்கள் கொலை

ஆந்திராவின் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள ஓங்கோல் என்ற இடத்தில் கொல்கத்தா - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 2008-ம் ஆண்டு சரக்குகளை ஏற்றி வந்த 13 லாரிகள் அடுத்தடுத்து மாயமாகின.லாரிகளை ஓட்டி வந்த டிரைவர்களும், அதில் இருந்த கிளீனர்களும் காணாமல் போயினர். அவர்கள் எங்கு சென்றனர், என்ன ஆனார்கள் என தெரியாமல் இருந்தது. இதுதொடர்பாக லாரி உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள், கிளீனர்களின் உறவினர்கள் அளித்த புகாரின்பேரில் ஓங்கோல் போலீசார் வழக்குபதிவு 5 தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையே மாயமான லாரியின் உதிரி பாகத்தை வைத்து விசாரணை நடத்தியதில், ஒரு கும்பல் சரக்கு லாரிகளை குறிவைத்து கொலை, கொள்ளையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. ஓங்கோலைச் சேர்ந்த அப்துல் சமத் என்கிற முன்னா என்பவர்தான் கொள்ளை கும்பலின் தலைவனாக செயல்பட்டு வந்துள்ளார். இவர் போக்குவரத்து அதிகாரி போல் நடித்து, லாரிகளை தனது அடியாட்கள் மூலம் நிறுத்தி சோதனை செய்து ஆவணங்களை கேட்பார். ஆவணங்களை டிரைவர்கள் கொடுக்கும்போது, அவர்களையும், கிளீனர்களையும் தாக்கி கொலை செய்துள்ளார். பின்னர், சரக்கு லாரியை கடத்தி வனப்பகுதிக்கு கொண்டு செல்வார். பின்னர் கொல்லப்பட்ட டிரைவர், கிளீனர்களின் உடல்களை வனப்பகுதியில் கூட்டாளிகளுடன் சேர்ந்து புதைத்து விடுவார். லாரியில் இருக்கும் சரக்குகளை அங்குள்ள கிடங்கில் இறக்கி வைத்துவிட்டு, லாரியை பிரித்து விற்று வந்துள்ளனர். மேலும் சரக்குகளையும் சந்தையில் விற்றதாக தெரிகிறது.

இதுதவிர பணக்காரர்களை குறி வைத்து, அவர்களின் வீட்டில் தங்கப் புதையலை தோண்டி தருவதாக கூறி பல கொலைகளை முன்னா செய்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது..

இந்த வழக்குகளில் கைது செய்யப்பட்ட முன்னா, பின்னர் ஜாமீனில் வெளியே வந்து பெங்களூருவுக்கு சென்று தலைமறைவாகி விட்டார். இதனை அறிந்த போலீசார் பெங்களூரு சென்று முன்னாவை கைது செய்தனர். அவரது கூட்டாளிகள் 18 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். முன்னா மற்றும் அவரது கூட்டாளிகள் மீது மொத்தம் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகள் ஓங்கோல் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தன.

இதில் 3 வழக்குகளில் விசாரணை முடிந்து, 8-வது செசன்ஸ் கோர்ட்டில் நேற்று முன்தினம் பரபரப்பு தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி வழிப்பறி, கொலை, கடத்தல் குற்றச்சாட்டுகளில் முன்னா உட்பட 12 பேருக்கு தூக்கு தண்டனையும், மேலும் 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

நாட்டிலேயே 12 பேருக்கு ஒரே வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு இருப்பது இதுவே முதன்முறையாகும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com