ஆபிரகாம் லிங்கனின் பைபிள் மீது உறுதிமொழி ஏற்கும் டிரம்ப்

ஆபிரகாம் லிங்கனின் பைபிள் மீது டிரம்ப் உறுதிமொழி ஏற்க உள்ளார்.
வாஷிங்டன்,
அமெரிக்காவில் கடந்த நவம்பரில் நடந்த ஜனாதிபதி தேர்தலில், குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து, அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக அவர் பதவியேற்க உள்ளார். அவரது பதவியேற்பு விழா வரும் 20-ந்தேதி நடைபெற உள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த விழாவில் பங்கேற்க பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தியா சார்பில், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் அமெரிக்க ஜனாதிபதியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பதவியேற்பு விழாவின்போது டிரம்ப் பயன்படுத்த உள்ள பைபிள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, பதவியேற்பு விழாவில் டிரம்ப், மறைந்த தனது தாய் தனக்கு கொடுத்த பைபிள் மற்றும் மறைந்த முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஆப்ரகாம் லிங்கன் பயன்படுத்திய பைபிள் ஆகியவற்றின் மீது உறுதிமொழி எடுக்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற போதும், லிங்கனின் பைபிளை கொண்டு டிரம்ப் பதவியேற்றிருந்தார். முன்னதாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா, கடந்த 2009 மற்றும் 2013 ஆகிய இருமுறை ஜனாதிபதியாக பொறுப்பேற்றபோதும் லிங்கனின் பைபிளை பயன்படுத்தி உறுதிமொழி ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.






