'போர் நிறுத்தம் பற்றிய டிரம்ப்பின் கருத்துகள் நாட்டை அவமானப்படுத்துகின்றன' - மல்லிகார்ஜுன கார்கே

‘ஆபரேஷன் சிந்தூர்’ விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் முழு ஒத்துழைப்பு அளித்ததாக மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்தொடர் அடுத்த மாதம் 21-ந்தேதி வரை ஒருமாத காலம் நடைபெறுகிறது. இந்நிலையில், கூட்டத்தொடர் தொடங்கிய சில நிமிடங்களில், பஹல்காம் தாக்குதலை விவாதிக்கக்கோரி அவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், சபாநாயகர் ஜகதீப் தன்கர் அவையை 12 மணி வரை ஒத்திவைத்தார்.
தொடர்ந்து 12 மணிக்கு, கேள்வி நேரத்திற்காக மாநிலங்களவை மீண்டும் கூடியபோது மீண்டும் பஹல்காம் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பிய காங்கிரஸ் கட்சியினர், பின்னர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். முன்னதாக அவையில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பஹல்காம் தாக்குதல் குறித்தும், போர் நிறுத்தம் தொடர்பான அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் கருத்துகள் குறித்தும் பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக மே 7-ந்தேதி இந்திய ராணுவம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது துல்லிய தாக்குதல் நடத்தியது. இதைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது.
எல்லையில் ராணுவ படைகள் தாக்குதல் நடத்த தொடங்கிய நிலையில், மே 10-ந்தேதி போர் நிறுத்தம் தொடர்பான அறிவிப்பு வெளியானது. இதற்கிடையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தனது தலையீட்டால்தான் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதாக கூறினார். இது தொடர்பாக மத்திய அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து இன்று நாடாளுமன்றத்தில் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, "போர் நிறுத்தம் பற்றிய டிரம்ப்பின் கருத்துகள் நாட்டை அவமானப்படுத்துகின்றன. அவர் ஒருமுறை அல்ல, சுமார் 24 முறை இதே கருத்தை கூறியிருக்கிறார். இது குறித்து மத்திய அரசு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும்.
'ஆபரேஷன் சிந்தூர்' விவகாரத்தில் மத்திய அரசுக்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் முழு ஒத்துழைப்பு அளித்தன. அதே சமயம், பஹல்காமில் பாதுகாப்பு குறைபாடு இருந்ததாக ஜம்மு-காஷ்மீர் துணைநிலை கவர்னர் மனோஜ் சின்ஹா ஒப்புக்கொண்டுள்ளார். பாதுகாப்பு படை தலைவர் (CDS), துணை ராணுவ தலைவர் மற்றும் மூத்த பாதுகாப்பு ஆலோசகர்களில் ஒருவர் ஆகியோர் 'ஆபரேஷன் சிந்தூர்' தொடர்பாக சில தகவல்களை வெளியிட்டுள்ளனர். இதுபோன்ற சூழலில், முழுமையான நிலவரம் என்ன என்பதை அரசாங்கத்திடமிருந்து நாங்கள் அறிய விரும்புகிறோம்" என்று தெரிவித்தார்.






