இந்திய பொருளாதாரம் குறித்து டிரம்ப் கூறியது உண்மை அல்ல - சசி தரூர்


இந்திய பொருளாதாரம் குறித்து டிரம்ப் கூறியது உண்மை அல்ல - சசி தரூர்
x

டிரம்ப் பேசுவதை அப்படியே எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை என சசி தரூர் தெரிவித்துள்ளார்.

மும்பை,

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடந்த வாரம் இந்திய பொருட்களின் இறக்குமதிக்கு 25 சதவீதம் வரி விதித்தார். மேலும் இந்திய பொருளாதாரத்தை 'வீழ்ந்த பொருளாதாரம்' என அவர் குறிப்பிட்டார். இந்த நிலையில், இந்திய பொருளாதாரம் குறித்து டிரம்ப் கூறியது உண்மை அல்ல என காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக புனேயில் உள்ள கிராஸ்வேர்டு நிறுவன தலைமை நிர்வாக அதிகாரியுடன் சசி தரூர் கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:-

"ஜனாதிபதி டிரம்ப் வெள்ளை மாளிகையில் இருக்கும்போது, அவர் எடுக்கும் முடிவுகளை நாம் கணிக்க முடியாது. டிரம்ப்பை பொறுத்தவரை அவர் பேசும் அனைத்தையும் அப்படியே உண்மை என்று எடுத்துக்கொள்ள கூடாது. ஆனால் அவரை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஏனெனில் அவர் ஒரு அமெரிக்க ஜனாதிபதி, அவர் எடுக்கும் முடிவால் வெளியுறவு கொள்கைகள் பாதிக்கலாம். எனவே அது நம்மையும் பாதிக்க வாய்ப்புள்ளது. எனவே அவரை மட்டும் தீவிரமாக எடுத்துக்கொள்ளுங்கள், அவர் பேசுவதை அப்படியே எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.

கடந்த 6 மாதங்களாக டிரம்ப்பின் வரி கொள்கைகளின் தாக்கம் முழு உலகையும் பின்னோக்கி அழைத்து சென்றுவிட்டது. மேலும் இதனால் ஒரு சிறிய அதிர்ச்சியை இந்தியாவும் சந்தித்தது. உலகின் மிகப்பெரிய பலம்மிக்க நாடுகளில் போர்கள் நடத்தப்படுகின்றன. மீண்டும் உலக ஒழுங்கை நிலைநிறுத்த வேண்டிய மக்கள் சீர்குலைவை ஊக்குவிக்கின்றனர்.

இதற்கு மத்தியில் இந்தியா நமது தேசிய நலன்களில் தெளிவாக இருக்க வேண்டும். இந்தியாவின் முதல் மற்றும் மிக முக்கியமான தேசிய நலன் நமது மக்களின் நல்வாழ்வு ஆகும். அதற்கு நாம் எல்லை பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும். நாம் சமீபத்தில் சீன தரப்பில் இருந்தும், பாகிஸ்தான் தரப்பில் இருந்தும் அச்சுறுத்தலுக்கு ஆளாகி உள்ளோம்."

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story