

243 தொகுதிகளை கொண்ட பீகார் மாநிலத்தில் முதல்-மந்திரியாக பதவி வகித்து வந்த ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர் நிதிஷ் குமார் மாநிலங்களவை எம்.பி.யாக அண்மையில் தேர்வானார். இதையடுத்து அவர் தனது முதல்-மந்திரி பதவியில் இருந்து கடந்த 14-ந் தேதி விலகியதையடுத்து, துணை முதல்-மந்திரியாக இருந்த பா.ஜனதாவின் சாம்ராட் சவுத்ரி மாநிலத்தின் புதிய முதல்-மந்திரியாக பொறுப்பேற்றார்.
இந்நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்காக பீகார் சட்டசபை இன்று கூட்டப்பட்டது. இதில் முதல்-மந்திரி சாம்ராட் சவுத்ரி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு எளிதாக வெற்றி பெற்றது. இதன் மூலம் பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒற்றுமை மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்தில் பேசிய ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ், “வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள நிலையான அரசு அவசியம். கடந்த 5 ஆண்டுகளில் இது ஐந்தாவது முறையாக அமைந்திருக்கும் அரசாகும். இதற்கு முன் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதல்-மந்திரி (நிதிஷ் குமார்) இருந்தார். தற்போது நியமிக்கப்பட்ட ஒருவர் (சாம்ராட் சவுத்ரி) முதல்-மந்திரியாகி இருக்கிறார். லாலு பிரசாத் யாதவின் பள்ளியில் பயின்ற ஒருவர், இந்த பதவியை ஏற்றுக்கொண்டிருப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்” என்றார்.
சாம்ராட் சவுத்ரி முதலில் சமதா கட்சியிலும், பின்னர் ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளிலும் இருந்தார். கடந்த 2017-ம் ஆண்டு சாம்ராட் சவுத்ரி பா.ஜனதாவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.