கர்நாடகாவில் ஆட்சியை கவிழ்க்க முயற்சி: எனது ஆட்சிக்கு அச்சுறுத்தல் இல்லை -குமாரசாமி உறுதி

கர்நாடகத்தில் ஆட்சியை கவிழ்க்க பா.ஜ.க முயற்சிப்பதாக அம்மாநில அமைச்சர் சிவக்குமார் புகார் கூறியுள்ள நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பெங்களூரில் அவசர ஆலோசனை நடத்தினர்.
கர்நாடகாவில் ஆட்சியை கவிழ்க்க முயற்சி: எனது ஆட்சிக்கு அச்சுறுத்தல் இல்லை -குமாரசாமி உறுதி
Published on

பெங்களூரு

கர்நாடகத்தில் மதச்சார்பற்ற ஜனதாதளம்-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க, "ஆபரேஷன் தாமரை" என்ற பெயரில் பாஜக தொடர்ந்து முயற்சி செய்து வருவதாக ஆளும் தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது. 224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டப்பேரவையில், ஆளும் கூட்டணிக்கு, சபாநாயகரை தவிர்த்து 116 உறுப்பினர்கள் ஆதரவு உள்ளது.

இந்நிலையில், 104 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக, அதிருப்தியில் உள்ள காங்கிரஸ், மஜத எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுத்து மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்கான தீவிர வேலைகளில் பாஜகவினர் செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

அமைச்சரவை மாற்றத்தில் பதவியை இழந்த ரமேஷ் ஜார்கிகோளி, அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சுயேட்சை எம்.எல்.ஏ ஒருவர் என 12 எம்.எல்.ஏ.க்கள் நாளை மறுநாள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைய உள்ளதாக வெளியான தகவல் கர்நாடகா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், ஆளும் கூட்டணியில் இருந்து 16 எம்எல்ஏ.க்களை ராஜினாமா செய்ய வைத்து, சட்டப்பேரவையின் பலத்தை 207 ஆகக் குறைப்பது என்றும், இதன் மூலம் 104 உறுப்பினர்கள் இருப்பதால் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைப்பது என்றும் பாஜக திட்டமிடுவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், எம்எல்ஏ.க்களை விலைக்கு வாங்கும் குதிரைபேரம் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும், காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் 3 பேர் மும்பையில் பாஜக எம்எல்ஏ.க்களுடன் இருப்பதாகவும் கர்நாடக காங்கிரசின் முன்னணி தலைவர்களில் ஒருவரும் அமைச்சருமான டி.கே.சிவக்குமார் கூறினார். மும்பையில் ஓட்டலில் என்ன பேசப்பட்டது, எவ்வளவு பணம் தருவதாகச் சொன்னார்கள் என்பது வரை தங்களுக்குத் தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பா.ஜனதாவினர் பேரம் பேசிய ஆதாரங்களை வெளியிடுவோம். இருப்பினும் கர்நாடகத்தில் கூட்டணி அரசை கவிழ்ப்பதில் பாஜக ஒருபோதும் வெற்றிபெற முடியாது என்றும் சிவக்குமார் தெரிவித்துள்ளார். இதனிடையே, கர்நாடக துணை முதலமைச்சரான ஜி.பரமேஸ்வரா, முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, டி.கே.சிவக்குமார், தினேஷ் குண்டுராவ் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த பரமேஸ்வரா கூறும்போது,

அரசு கவிழும் என பாஜகவினர் தொடர்ந்து கூறிக்கொண்டேயிருந்தாலும், அது ஒருபோதும் நடக்காது என்றார். சில எம்எல்ஏ.க்கள் விடுமுறையை கழிப்பதற்கு அல்லது கோவிலுக்கு குடும்பத்துடன் வெளியூர் சென்றிருக்கலாம் என்றும், அனைத்து காங்கிரஸ் எம்எல்ஏ.க்களும் தங்கள் பக்கம் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார். பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டிய நிலையில் அதுகுறித்து ஆலோசிப்பதற்காக காங்கிரஸ் சார்பில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களை சந்தித்ததாகவும் பரமேஸ்வரா கூறினார்.

இது குறித்து முதல் மந்திரி குமாரசாமி கூறும்போது ,

3 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் என்னிடம் தொடர்பில் உள்ளனர். அவர்கள் மும்பைச் செல்வதற்கு முன் என்னிடம் சொல்லிவிட்டுதான் சென்றார்கள். அரசுக்கு எந்தவித மிரட்டலும் இல்லை. பாரதீய ஜனதா யாரை தொடர்பு கொள்கிறது, என்ன தருவதாக சொல்கிறார்கள் என்பது எல்லாம் எனக்கு தெரியும். இதை நான் கையாளுவேன். எதற்கு ஊடகங்கள் கவலைப்படவேண்டும் என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com