

புதுடெல்லி,
டுவிட்டர் நிறுவனம் அரசியல் விளம்பரங்களை கடந்த 2019-ம் ஆண்டு தடை செய்தது. தற்போது தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில், இந்த விளம்பரங்கள் வெளியாவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த நிறுவனம் தெரிவித்து உள்ளது.
இது குறித்து டுவிட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் சில நாட்களில் தேர்தல் நடைபெறுகிறது. இந்த சூழலில் இந்தியா மற்றும் உலக அளவில் நடந்துள்ள முந்தைய தேர்தல்களில் கற்ற பாடங்கள் மூலமாக குறிப்பிடத்தக்க தயாரிப்பு, கொள்கை மற்றும் புதுப்பித்தல்களை நாங்கள் அமல்படுத்தி இருக்கிறோம் என்று கூறியுள்ளது.
அரசியல் செய்திகள் தானாக சென்றடைய வேண்டும் எனவும், அது வாங்கக்கூடாது எனவும் கூறியுள்ள டுவிட்டர் நிறுவனம், வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளிடமிருந்து விளம்பரங்களை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று நம்புவதாகவும் கூறியுள்ளது. எனவே விரிவான மற்றும் நுணுக்கமான வழிமுறைகள் மூலம் தடைசெய்யப்பட்ட அரசியல் விளம்பரங்களைத் தடுக்க செயலூக்கமான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது.