

மும்பை,
மும்பையில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்குள் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
பிரதமர் மோடி மும்பையில் உள்ள ஜியோ உலக மையத்தில் இன்று மாலை நடைபெறும் உலகளாவிய நிதி தொழில்நுட்ப விழாவை தொடங்கி வைக்க உள்ளார். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு அருகில் உள்ள நீதா முகேஷ் அம்பானி கலாசார மையத்தில் சந்தேகத்துக்குரிய வகையில் நடமாடிய இருவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அதில் ஒருவர் பெயர் ரோகன் பரேக் (24 வயது). அவர் பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றுவதாக கூறி அடையாள அட்டையை காட்டியுள்ளார். மற்றொருவர் அவரது மெய்க்காப்பாளர் என்று தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அந்த அடையாள அட்டையை பரிசோதித்தபோது போலியானது என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். மெய்க்காப்பாளர் என்று கூறிய நபரிடம் இருந்து துப்பாக்கி ஒன்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
துப்பாக்கியுடனும், போலி அடையாள அட்டையுடனும் பிரதமர் பங்குபெறும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்குள் அத்துமீறி இருவர் நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்யப்பட்ட இருவரிடமும், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுடைய செல்போன்கள், அடையாள ஆவணங்கள் மற்றும் இதர உடைமைகளும் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.