கர்நாடக சட்டசபையில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் சபாநாயகர் இருக்கை முன்பு தர்ணா

பஞ்சமசாலி பிரிவுக்கான இடஒதுக்கீடு தொடர்பாக ஆளுங்கட்சியான பா.ஜனதா உறுப்பினர்கள் 2 பேர் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு தர்ணா நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கர்நாடக சட்டசபையில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் சபாநாயகர் இருக்கை முன்பு தர்ணா
Published on

பிரச்சினை கிளப்பினார்

கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 13-ந் தேதி பெங்களூரு விதான சவுதாவில் தொடங்கியது. முதல் நாள் கூட்டத்தில் இந்நாள் மற்றும் முன்னாள் உறுப்பினர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு சபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த கூட்டத்தொடரின் 9-வது நாள் கூட்டம் இன்று காலை விதான சவுதாவில் தொடங்கியது.

கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரம் எடுத்து கொள்ளப்பட்டது. அதன் பிறகு பூஜ்ஜிய நேரத்தை சபாநாயகர் காகேரி அனுமதித்தார். இந்த பூஜ்ஜிய நேரத்தில் பா.ஜனதா உறுப்பினர் பசனகவுடா பட்டீல் யத்னால், லிங்காயத்தில் பஞ்சமசாலி பிரிவுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான விவகாரம் குறித்து பிரச்சினை கிளப்பினார்.

இடஒதுக்கீடு போராட்டங்கள்

அவர் பேசுகையில், வீரசைவ-லிங்காயத், குருபா, வால்மீகி உள்ளிட்ட பல்வேறு சமூகங்கள் இடஒதுக்கீடு கேட்டு போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்த விஷயத்தில் அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. பஞ்சமசாலி பிரிவை 2ஏ பட்டியலில் சேர்ப்பது குறித்து 6 மாதங்களில் நடவடிக்கை எடுப்பதாக முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா உறுதியளித்தார். இப்போது புதிய முதல்-மந்திரி வந்துள்ளார். இந்த விஷயத்தில் அவரது நிலை என்ன என்பதை தெரிவிக்க வேண்டும் என்றார்.

அப்போது சபாநாயகர் காகேரி, முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மேல்-சபையில் உள்ளார். அவர் வந்த பிறகு பதில் அளிக்க உத்தரவிடுகிறேன். இல்லாவிட்டால் தற்போது அவையில் உள்ள பொதுப்பணித்துறை மந்திரி சி.சி.பட்டீல் பதிலளிக்க தயாராக உள்ளார். அவரை பதிலளிக்க அனுமதிக்கட்டுமா? என்றார். அதற்கு பசனகவுடா பட்டீல் யத்னால், முதல்-மந்திரி தான் பதிலளிக்க வேண்டும் என்று பிடிவாதமாக கூறினார்.

6 மாதங்கள் முடிந்துவிட்டன

அதைத்தொடர்ந்து பா.ஜனதா உறுப்பினர் அரவிந்த் பெல்லத் பேசுகையில், , இது ஒரு சமுதாயத்தின் நிலை ஆகும். எங்களின் கோரிக்கை குறித்த விஷயத்தில் அரசு தனது நிலையை அறிவிக்க வேண்டும். பொதுப்பணித்துறை மந்திரி சி.சி.பட்டீல் பதிலளித்தால் ஏற்க முடியாது. முதல்-மந்திரி அல்லது சட்டத்துறை மந்திரி ஆகிய இருவரில் ஒருவர் பதிலளிக்க வேண்டும் என்றார்.

மீண்டும் பேசிய பசனகவுடா பட்டீல் யத்னால், பஞ்சமசாலி பிரிவை 2ஏ பிரிவில் சேர்ப்பது குறித்து 6 மாதங்களில் முடிவு எடுப்பதாக எடியூரப்பா கூறினார். அந்த 6 மாதங்கள் முடிந்துவிட்டன. தற்போது முதல்-மந்திரி பதவியில் எடியூரப்பா இல்லை. புதிய முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையும் இந்த விஷயத்தில் அலட்சியமாக நடந்து கொள்கிறார் என்று கூறினார்.

தர்ணாவில் ஈடுபட்டனர்

அதைத்தொடர்ந்து பசனகவுடா பட்டீல் யத்னால், அரவிந்த் பெல்லத் ஆகியோர் சபாநாயகர் இருக்கையின் முன்பகுதிக்கு வந்து தர்ணாவில் ஈடுபட்டனர். ஆளுங்கட்சி உறுப்பினர்களே தர்ணாவில் ஈடுபட்டது சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. வால்மீகி சமூகத்திற்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்க கோரி காங்கிரஸ் உறுப்பினர் கணேசும் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய சித்தராமையா, முதல்-மந்திரி, சட்டத்துறை மந்திரி ஆகியோர் மேல்-சபையில் உள்ளதாகவும், அவர்கள் வந்த பிறகு பதிலளிக்க உத்தரவிடுவதாகவும் சபாநாயகர் சொல்கிறார். அதனால் தர்ணா நடத்துவது சரியல்ல. இருக்கைக்கு திரும்பி செல்லுங்கள். சபையை நடத்த அனுமதிக்க வேண்டும் என்றார். அதைத்தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட உறுப்பினர்கள் இருக்கைக்கு திரும்பினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com