

டேராடூன்,
உத்தரகாண்ட்டில் பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் கார் தீப்பற்றி எரிந்து அதில் இருந்த 2 பேர் உயிரிழந்தனர்.
உத்தரகாண்ட் மாநிலம் பித்தோரகர் மாவட்டம் கனலிசனா பகுதியை சேர்ந்தவர் பல்தேவ் குமார் (வயது 36). இவருக்கு திருமணமாகி நீது தேவி (வயது 35) என்ற மனைவியும் ஆத்வித் (வயது 8), ஆரவ் ( வயது 5) என்ற இரு பிள்ளைகளும் உள்ளனர்.
இதனிடையே, பல்தேவ் குமார் புதிய காரை வாங்கியுள்ளார். அந்த காரில் மனைவி, குழந்தைகளுடன் பல்தேவ் குமார் ஹடல்வானி பகுதியில் இருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அந்த காரை திதிஹட் பகுதியை சேர்ந்த ராஜேந்திர குமார் ஓட்டியுள்ளார்.
இந்நிலையில், மலைப்பாங்கான பண்டொலி பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரில் பயணித்த நீது தேவி மற்றும் 2 பிள்ளைகளும் படுகாயங்களுடன் உயிர் தப்பி காருக்குள் இருந்து வெளியேறினர். ஆனால், விபத்தில் பல்தேவ் குமார், டிரைவர் ராஜேந்திர குமார் ஆகிய இருவரும் காருக்குள் சிக்கிக்கொண்டனர்.
அப்போது கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. இந்த சம்பவத்தில் காரில் இருந்த இருவரும் உடல் கருகி உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார், விரைந்து சென்று காயமடைந்த 3 பேரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.