கர்நாடகாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் திடீர் ராஜினாமா - குமாரசாமி அரசுக்கு நெருக்கடி

கர்நாடகாவில் காங்கிரசை சேர்ந்த 2 எம்.எல்.ஏ.க்கள் நேற்று திடீரென ராஜினாமா செய்தனர். இதனால் குமாரசாமி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் திடீர் ராஜினாமா - குமாரசாமி அரசுக்கு நெருக்கடி
Published on

பெங்களூரு,

கர்நாடகாவில் காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கூட்டணி சார்பில் ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்த குமாரசாமி, கடந்த ஆண்டு முதல்-மந்திரியானார். துணை முதல்-மந்திரியாக காங்கிரசை சேர்ந்த பரமேஸ்வர் உள்ளார். இதில் மந்திரி பதவி கிடைக்காத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பலர் அவ்வப்போது அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி வருகிறார்கள்.

அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட கூட்டணி அரசுக்கு எதிராக சில எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கினர். இதனால் காங்கிரஸ் கட்சி தனது எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் பெங்களூரு அருகே உள்ள ஒரு ஓட்டலில் தங்க வைத்தது.

அங்கு எம்.எல்.ஏ.க்கள் ஆனந்த்சிங், கணேஷ் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஆனந்த்சிங் படுகாயமடைந்தார். அவரை தாக்கிய கணேஷ் எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரை காங்கிரஸ் கட்சி இடைநீக்கம் செய்தது. பின்னர் சிறையில் இருந்து வெளியே வந்த அவர் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டார்.

இந்த நிலையில் ஆனந்த்சிங் எம்.எல்.ஏ. நேற்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்ததாக அறிவித்தார். ஆனால் தனது அலுவலகத்திற்கு எந்த ராஜினாமா கடிதமும் வரவில்லை என்று சபாநாயகர் ரமேஷ்குமார் மறுத்தார்.

இதையடுத்து ஆனந்த்சிங், ராஜ்பவனுக்கு சென்று கவர்னரை சந்தித்து ராஜினாமா கடிதத்தின் நகலை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பெல்லாரியில் ஜிந்தால் நிறுவனத்திற்கு மாநில அரசு 3,667 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இது பெல்லாரி மாவட்டத்துக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும். எனது ராஜினாமாவில் அரசியல் இல்லை. நான் எந்த கட்சிக்கு ஆதரவாகவும் செயல்படவில்லை. எனது மாவட்டத்திற்கு ஏற்படும் அநீதியை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. எனது தொகுதியான விஜயநகரை மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.

இந்த கோரிக்கைகளை காங்கிரஸ் தலைவர்களிடம் கூறியுள்ளேன். எனது கோரிக்கையை ஏற்றுக்கொண்டால் நான் ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெறுவேன். இல்லாவிட்டால் ராஜினாமா முடிவில் இருந்து பின்வாங்கமாட்டேன். காங்கிரசுக்கு எதிராக நான் செயல்படவில்லை. எனது மாவட்டம் சார்ந்த பிரச்சினைக்காக குரல் கொடுக்கிறேன். இவ்வாறு ஆனந்த்சிங் கூறினார்.

ராஜினாமா செய்து கடிதம் கொடுத்துள்ள ஆனந்த்சிங், ஆரம்பத்தில் பா.ஜனதா கட்சியில் இருந்தார். சட்டசபை தேர்தலுக்கு முன்பாக தான் அவர் காங்கிரசில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனந்த்சிங் எம்.எல்.ஏ.வை தொடர்ந்து முதல்-அமைச்சர் குமாரசாமி மந்திரி சபையில் இருந்து நீக்கப்பட்ட காங்கிரசை சேர்ந்த மற்றொரு எம்.எல்.ஏ.வான ரமேஷ் ஜார்கிகோளி நேற்று மாலையில் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் தன் ராஜினாமா கடிதத்தை பேக்ஸ் மூலம் சபாநாயகர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தார்.

இதைப்போல காங்கிரசை சேர்ந்த மகேஷ் குமடஹள்ளி, நாகேந்திரா உள்பட 12 எம்.எல்.ஏ.க்கள் வரை ராஜினாமா செய்வார்கள் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் கூட்டணி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா முடிவின் பின்னணியில் பா.ஜனதா இருப்பதாக கூறப்படுகிறது. ராஜினாமா செய்வதற்கு முன்பு ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங்கை ஆனந்த்சிங் சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

காங்கிரசை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் திடீரென ராஜினாமா செய்துள்ளதால், கூட்டணி கட்சி தலைவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ராஜினாமா செய்துள்ள ஆனந்த்சிங்கை சமாதானப்படுத்த காங்கிரஸ் தலைவர்கள் தீவிரமாக முயற்சி செய்து வருகிறார்கள். மேலும் அமெரிக்க சுற்றுப்பயணத்தில் உள்ள முதல்-மந்திரி குமாரசாமியும் அங்கிருந்தபடியே அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு சமாதான முயற்சியில் ஈடுபட்டார்.

ஒரே நாளில் காங்கிரசை சேர்ந்த 2 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து கடிதம் கொடுத்த சம்பவம் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com