2 அவைகளின் தலைவர்களும் நடுநிலையாக செயல்படவில்லை: ப.சிதம்பரம்

திருட்டுத்தனமாக மசோதாக்களை நிறைவேற்ற முயன்றதால் மாநிலங்களவையில் ரகளை நடந்தது. 2 அவைகளின் தலைவர்களும் நடுநிலையாக செயல்படவில்லை என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
2 அவைகளின் தலைவர்களும் நடுநிலையாக செயல்படவில்லை: ப.சிதம்பரம்
Published on

உடன்பாடு இல்லை

மாநிலங்களவையில் கடந்த 11-ந்தேதி நடந்த ரகளை குறித்து முன்னாள் மத்திய மந்திரியும், மாநிலங்களவை காங்கிரஸ் எம்.பி.யுமான ப.சிதம்பரம் ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது:-

பொது காப்பீட்டு சட்ட திருத்த மசோதா நிறைவேற்றுவதை எதிர்ப்பதாக எதிர்க்கட்சிகள் முன்கூட்டியே தெரிவித்தோம். அதை நிறைவேற்றாமல், தேர்வுக்குழு பரிசீலனைக்கு அனுப்புமாறு கூறினோம்.இதில் உடன்பாடு ஏற்படாததால், இதர பிற்படுத்தப்பட்டோர் மசோதாவை (ஓ.பி.சி.) நிறைவேற்றியவுடன் கூட்டத்தொடரை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

வாக்குறுதியை மீறியது

ஆனால், ஓ.பி.சி. மசோதா நிறைவேற்றப்பட்டவுடன், பொது காப்பீட்டு மசோதா மற்றும் ஒன்றிரண்டு மசோதாக்களை திருட்டுத்தனமாக நிறைவேற்ற மத்திய அரசு முயற்சி மேற்கொண்டது. கொடுத்த வாக்குறுதியை மீறி அப்படி நடந்து கொண்டதால், எதிர்க்கட்சிகள் இயல்பாகவே கோபம் அடைந்தன. ஆவேசமாக எதிர்ப்பு தெரிவித்தன. எனவே, இந்த ரகளைக்கு மத்திய அரசுதான் காரணம்.சபை என்பது ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி இரண்டையும் கொண்டது. ஒட்டுமொத்த சபையின் உணர்வுகளை சபை தலைவர்கள் பிரதிபலிக்க வேண்டும். ஆனால், நடுநிலையாக இருக்க வேண்டிய 2 அவைகளின் தலைவர்களும் நடுநிலையாக செயல்படவில்லை. இதை கனத்த இதயத்துடனும், வருத்தத்துடனும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com