

ஸ்ரீநகர்,
புல்வாமா மாவட்டம் தராப்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் காணப்படுவதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் பயங்கரவாதிகளை தேடும் பணியை மேற்கொண்டது. மறைந்து இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினர் பதிலடியை தொடங்கினர். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் மூன்று பாதுகாப்பு படை வீரர்கள் காயம் அடைந்தனர். காயம் அடைந்த அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதற்கிடையே அப்பகுதியை சேர்ந்த மக்கள் என்கவுண்டர் நடக்கும் பகுதிக்கு சென்று இடையூறு ஏற்படுத்தினார்கள். பொதுமக்கள் பாதுகாப்பு படையினர் அவர்களுடைய பணியை செய்யவிடாதவாறு கற்களை வீசி உள்ளனர். இதனையடுத்து பாதுகாப்பு படையினர் அவர்களை விரட்டி உள்ளனர். இதில் பொதுமக்களும் காயம் அடைந்து உள்ளனர். பாதுகாப்பு படையினர் கொடுத்த பதிலடி தாக்குதலில் இரு பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். இன்னும் ஒரு பயங்கரவாதி அப்பகுதியில் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் சோதனையை தீவிரப்படுத்தி உள்ளார்கள். பாதுகாப்பு படையினர் நடவடிக்கையில் பொதுமக்களில் ஒருவர் உயிரிழந்தார் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்து உள்ளது.