காஷ்மீரில் அரசு விழாவில் குண்டு வெடித்ததில் அதிகாரி உள்பட 2 பேர் பலி - துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்

காஷ்மீரில் அரசு விழாவில் குண்டுவெடித்ததில் அதிகாரி உள்பட 2 பேர் பலியானார்கள். பாதுகாப்பு படையினருடன் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
காஷ்மீரில் அரசு விழாவில் குண்டு வெடித்ததில் அதிகாரி உள்பட 2 பேர் பலி - துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்
Published on

ஸ்ரீநகர்,

காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் வகூரா பகுதியில் அரசு சார்பில் கிராமத்துக்கு திரும்புவோம் திட்ட விழா நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது அந்த இடத்தில் திடீரென குண்டு வெடித்தது. இதில் 6 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.

இதில் 2 பேர் வழியிலேயே பரிதாபமாக இறந்தனர். அவர்கள் வேளாண் அதிகாரி சகூர் அகமது, கிராம பஞ்சாயத்து தலைவர் பீர்சையது ரபீக் என தெரியவந்தது. மற்ற 4 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு வெடிகுண்டுகளை யாரும் வீசினார்களா? அல்லது அந்த இடத்தில் பதுக்கி வைத்திருந்தனரா? என்பது தெரியவில்லை. இதுபற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

அதேபோல ஸ்ரீநகர் ஹசரத்பால் பகுதியில் காஷ்மீர் பல்கலைக்கழக வாசல் அருகே உள்ள மார்க்கெட்டில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் 3 பேர் காயம் அடைந்தனர். போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து குண்டு வீசியவர்களை தேடி வருகிறார்கள். முதல்கட்ட விசாரணையில் இது குறைந்த சக்தி கொண்ட வெடிகுண்டு என்பது தெரியவந்துள்ளது.

தெற்கு காஷ்மீர் புல்வாமா மாவட்டம் ஷாதிமார்க் பகுதியில் நேற்று முன்தினம் மாலை பாதுகாப்பு படையினர் சோதனை சாவடி அமைத்து வாகனங்களை சோதனை செய்துகொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் சிலர் சோதனை சாவடியில் இருந்த பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

இதைத்தொடர்ந்து பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இந்த சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்கள் ஹிஜ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த இர்பான் அகமது ஷேக், இர்பான் அகமது ராதெர் என தெரியவந்தது.

அவர்கள் வசம் இருந்த ஆயுதங்கள் மற்றும் கருவிகளை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர். இருவரும் காஷ்மீரில் பல்வேறு பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடையவர்கள் என தெரியவந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com