

கவுகாத்தி
மணிப்பூரில் குகி இன பெண்கள் 2 பேர் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளனர்.
மணிப்பூரில் கடந்த 2023-ம் ஆண்டு மே 3-ந்தேதி குகி மற்றும் மெய்தி இனங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல், வன்முறையாக உருமாறியது. இதில், 60-க்கும் மேற்பட்டோர் ஒரு சில மாதங்களில் கொல்லப்பட்டனர். ராணுவம் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
எனினும், 3 ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வந்த வன்முறையால் இதுவரை 306 பேர் கொல்லப்பட்டு உள்ளனர் என கடந்த வாரம் சட்டசபையில் அரசு தெரிவித்தது.
இந்த சூழலில், தமெங்லாங் மாவட்டம் லெய்சாங்பாய் கிராமத்தில் நேற்று வன்முறை தாக்குதல் நடந்தது. இந்த சம்பவத்தில் மர்ம நபர்கள் ஊருக்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், குகி சமூகத்தின் பெண்கள் 2 பேரை கொன்று விட்டு தப்பினர்.
அவர்களில் ஒருவர் கிம்ஜல்ஹாய் சிங்சன் (வயது 28) ஆவார். அவர் நர்ஸ் படிப்பை முடித்து விட்டு, வீட்டுக்கு திரும்பியுள்ளார். மற்றொருவர் பல்னிசோங் என்ற சோங்கா சித்லோ (வயது 76) என அடையாளம் காணப்பட்டு உள்ளார். அவருடைய பண்ணையில் விறகு சேகரித்து கொண்டிருந்தபோது, சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளார்.
இந்த சம்பவத்தில் நீதி கிடைக்கும் வரை கொல்லப்பட்ட பெண்களின் உடல்களை பெற்றுக்கொள்ள மாட்டோம் என குகி அமைப்பு தெரிவித்துள்ளது.
சமீபத்தில், கடந்த 13-ந்தேதி தமெங்லோங் மாவட்டத்தின் டால்லென் கிராமத்தில் மற்றும் நானி மாவட்டத்தின் லோங்பை கிராமத்தில் நடந்த வெவ்வேறு வன்முறை சம்பவங்களில் தம்பதி உள்பட 4 பேர் கொல்லப்பட்டனர். இந்த சூழலில், நேற்று 2 பெண்கள் சுட்டு கொல்லப்பட்டு உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.