

ஜம்மு,
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ராஜோவ்ரி மாவட்டத்திலுள்ள சோதனைச்சாவடியில் பாதுகாப்பு படையினர் வாகனசோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்பொழுது இரு சக்கர வாகனத்தில் ஆயுதங்களுடன் வந்த இரண்டு பயங்கரவாதிகளை சோதனையிட்ட போலீசார் அவர்களை கைது செய்தனர்.
பயங்கரவாதிகள் கைது குறித்து ராஜோவ்ரி மாவட்டத்தின் உயர் போலீஸ் அதிகாரி யோகல் மான்ஹாஸ் கூறுகையில், ராஜோவ்ரி-டிகேஜி சாலையில் இரவு வேளைகளில் போலீஸ் முகாம்களிலுள்ள ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை பயங்கரவாதிகள் சிலர் திருடிசெல்வதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்டத்தின் சோதனைச்சாவடியில் பாதுகாப்பு படையினர் மற்றும் 72 பட்டாலியன் பிரிவைச் சேர்ந்த சிஆர்பிஃப் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்பொழுது சந்தேகத்திற்க்கிடமாக இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் பாதுகாப்பு படையினரை கண்டதும் வாகனத்தை நிறுத்தாமல் தப்பி செல்ல முயன்றனர்.
அவர்களை துரத்தி சென்ற போலீசார் இருவரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 3 துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களையும் கைப்பற்றினர். கைதானவர்கள் சோபியன் மாவட்டத்தைச் சேர்ந்த முக்தார் அகமத் (22), ஐஜாஷ் அகமத் பாரே (22) என்பதும், ஆயுதங்களை கடத்தி வந்ததும் விசாரணையில் தெரிய வந்ததுள்ளது. இது தொடர்பாக தானாமண்டி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறோம் எனக் கூறினார்.