

ஜம்மு,
பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்த பயங்கரவாதிகள், இந்தியாவின் ராணுவ முகாம்களை குறிவைத்து அவ்வப்போது தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக நேற்று காஷ்மீரின் சஞ்சுவான் ராணுவ முகாமில் தற்கொலைப்படை பயங்கரவாதிகள் தாக்குதலை அரங்கேற்றினர். ஜம்மு நகருக்கு அருகே உள்ள இந்த முகாமுக்குள் ராணுவ வீரர்களின் குடியிருப்புகளும் அமைந்துள்ளன.
பலத்த பாதுகாப்பு நிறைந்த இந்த முகாமுக்கு நேற்று அதிகாலை 4.55 மணியளவில் பயங்கரவாதிகள் சிலர் வந்தனர். அப்போது அங்கு காவல் பணியில் இருந்த வீரர் ஒருவர் இதைப்பார்த்து உஷாரானார். ஆனால் அதற்குள் அவரது பதுங்கு குழியை நோக்கி துப்பாக்கியால் சுட்டவாறு முகாமின் பின்பகுதி வழியாக பயங்கரவாதிகள் முகாமுக்குள் நுழைந்தனர்.
பின்னர் முகாமுக்குள் கையெறி குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் முன்னேறினர். அதிகாலை நேரத்தில் நிகழ்ந்த இந்த திடீர் பயங்கரத்தை பார்த்து ராணுவ வீரர்கள் சுதாரிப்பதற்குள், பயங்கரவாதிகள் கண்ணில் பட்ட அனைவரையும் துப்பாக்கியால் சுட்டுத்தள்ளினர்.
இதில் குண்டு பாய்ந்து ராணுவ அதிகாரிகளான மதன்லால் சவுத்ரி, முகமது அஸ்ரப் மிர் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் ஹவில்தார் அப்துல் ஹமீது, லான்ஸ் நாயக் பகதூர் சிங், கர்னல் நிலையில் உள்ள ஒரு அதிகாரி உள்பட 9 பேர் காயமடைந்தனர். இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் அடங்குவர். மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு வெறியாட்டத்தில் ஈடுபட்ட அந்த பயங்கரவாதிகள் மீது ராணுவ வீரர்கள் பதில் தாக்குதலை தொடுத்தனர். உடனே அந்த பயங்கரவாதிகள் ராணுவ குடியிருப்பு ஒன்றில் சென்று பதுங்கிக்கொண்டனர். பின்னர் அங்கிருந்தவாறே தாக்குதலை தொடர்ந்தனர்.
ராணுவ முகாமில் பயங்கரவாதிகள் புகுந்த தகவல் அறிந்ததும் கூடுதல் படையினர் அங்கே விரைந்தனர். ராணுவத்தின் சிறப்பு படைப்பிரிவினர் மற்றும் கமாண்டோக்கள் அந்த முகாமை சுற்றிவளைத்து பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணிகளை மேற்கொண்டனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சண்டை நடந்து வருகிறது.
இதில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மீதமுள்ளவர்களையும் உயிருடனோ, பிணமாகவோ பிடிப்பதற்கான நடவடிக்கையில் ராணுவம் மும்முரமாக ஈடுபட்டு உள்ளது.
முகாமுக்குள் நுழைந்த பயங்கரவாதிகள் எத்தனை பேர்? என்பது குறித்த சரியான விவரம் தெரியவில்லை. எனினும் 4 அல்லது 5 பேர் வரை இருக்கக்கூடும் என தகவல்கள் கூறுகின்றன.