கடும் பாதுகாப்பையும் மீறி விமான நிலையத்தில் பிச்சை எடுத்த 2 பேர் கைது- போலீசார் விசாரணை

பெங்களூரு அருகே விமான நிலையத்தில் பாதுகாப்பு அரண்களையும் மீறி உள்ளே நுழைந்து பயணிகளிடம் பிச்சை எடுத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடும் பாதுகாப்பையும் மீறி விமான நிலையத்தில் பிச்சை எடுத்த 2 பேர் கைது-  போலீசார் விசாரணை
Published on: 

விமான நிலையம்

பெங்களூரு அருகே தேவனஹள்ளியில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலை யம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் சமீபத்தில் வாலிபர் ஒருவர் செல்போனில் உள்ள கியூ-ஆர் கோடுவை பயன்படுத்தி பிச்சை எடுத்து வந்தார். அவரை பிடித்து போலீசார் எச்சரித்து அனுப்பி இருந்தனர். இந்த நிலையில் அதேபோன்ற சம்பவம் மீண்டும் பெங்களூரு விமான நிலையத்தில் அமைந்துள்ளது.

பெங்களூரு விமான நிலையம் 2-வது முனையத்துக்கு உள்ளே வரும் பகுதியில் ஒரு வாலிபர் நின்று கொண்டு பயணிகளிடம் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். அதை கவனித்த போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் பிரதீக் பாட்டியா என்பதும், இதற்கு முன்பும் அவர் விமான நிலையத்தில் பயணிகளிடம் பிச்சை எடுத்து சிக்கி இருந்ததும் தெரியவந்தது.

2 பேர் கைது

அதுபோல் விமான நிலையத்தின் 2-வது முனையத்தில் ஓடுபாதையை கவனிக்கும் பாதுகாப்பு பிரிவினர் இருக்கும் பகுதியில் ஒருவர் நின்று கொண்டு பயணிகளிடம் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். முககவசம் அணிந்தபடி, டிப்-டாப் உடையில் நின்றிருந்ததால் அவர் பயணியாக இருக்க கூடும் என்று கருதி கண்டுகொள்ளாமல் இருந்த போலீசார், பின்னர் அவர் பிச்சை எடுத்தவுடன் பிடித்து விசாரித்தனர்.விசாரணையில் அவர் வெங்கடதினேஷ் குமார் என்பதும், பயணிகளிடம் தொடர்ந்து பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி வந்ததும் தெரியவந்தது.கைதான 2 பேர் மீதும் விமான நிலைய போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள்.

போலீஸ் விசாரணை

பெங்களூரு விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு உள்ளது. இத்தனை பாதுகாப்பு அரண்களையும் மீறி அவர்கள் 2 பேரும் எப்படி உள்ளே நுழைந்து பயணிகளிடம் பிச்சை எடுத்தனர் என்பது கேள்விக்குறியாக உள்ளது. அதுபற்றி போலீசாரும், விமான நிலைய அதிகாரிகளும் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com