நாடாளுமன்ற தாக்குதல் தினம்.. மக்களவையில் நடந்த பகீர் சம்பவம்.. பாதுகாப்பு குறைபாடா?

பார்வையாளர் அரங்கத்தில் இருந்து 2 நபர்கள் நுழைந்ததையடுத்து, மக்களவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற தாக்குதல் தினம்.. மக்களவையில் நடந்த பகீர் சம்பவம்.. பாதுகாப்பு குறைபாடா?
Published on

புதுடெல்லி:

டெல்லியில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருவதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று நாடாளுமன்ற தாக்குதல் தினம் என்பதால் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தபடி உள்ளனர். பார்வையாளர்கள் தீவிர சோதனைக்கு பிறகே நாடாளுமன்றத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், பலத்த பாதுகாப்பையும் மீறி மக்களவைக்குள் இரண்டு நபர்கள் அத்துமீறி நுழைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மக்களவையில் ஜீரோ அவரின்போது, பார்வையாளர் அரங்கில் இருந்த நபர்கள் மக்களவைக்குள் நுழைந்துள்ளனர். அவர்கள் கண்ணீர் புகை வீசும் குப்பிகளை வைத்திருந்தனர். அவர்களில் ஒருவர் எம்.பி.க்கள் அமர்ந்திருக்கும் டேபிள்கள் மீது தாவி சென்றார். எதிர்ப்பு முழக்கமும் எழுப்பினார்.

அவரைப் பிடிக்க சில எம்.பி.க்கள் முயன்றனர். பின்னர் இருவரையும் பாதுகாவலர்கள் பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவம் காரணமாக மக்களவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

இதேபோல் நாடாளுமன்ற கட்டிடத்திற்கு வெளியே மஞ்சள் நிற புகையை வெளியிட்டு போராட்டம் நடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியிருப்பதாவது:-

ஜீரோ அவர் நடந்து கொண்டிருந்தபோது, ஒரு நபர் மக்களவையின் பெஞ்ச்களின் மீது குதித்தார். மற்றொருவர் பார்வையாளர் அரங்கில் இருந்து கண்ணீர் புகைக் குண்டுகளை வீசும் குப்பி மூலம் மஞ்சள் நிற வாயுவை திறந்து விட்டதை பார்க்க முடிந்தது.

2001-ல் உயிர்த் தியாகம் செய்தவர்களின் நினைவு நாளை இன்று அனுசரிக்கிறோம். எனவே, இது நிச்சயமாக பாதுகாப்பு குறைபாடுதான்.

இவ்வாறு கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com