அடுத்த ஆண்டு விண்வெளிக்கு 2 முறை ஆளில்லா விண்கலம் பயணம்..! மாநிலங்களவையில் தகவல்

‘ககன்யான்’ திட்டத்திற்கு முன்பாக அடுத்த ஆண்டு விண்வெளிக்கு 2 முறை ஆளில்லா விண்கலம் விண்வெளிக்கு பயணம் மேற்கொள்ளும் என்று மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

விண்வெளிக்கு விண்வெளி வீரர்களை அனுப்ப ககன்யான் திட்டத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) உருவாக்கி உள்ளது. இதன்படி, 3 விண்வெளி வீரர்கள், ககன்யான் விண்கலத்தில் விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். அடுத்த ஆண்டு இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாக இருந்தது. இந்தநிலையில், 2023-ம் ஆண்டுக்கு இது தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது விண்வெளி துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் கூறியதாவது:- ககன்யான் திட்டம், 2023-ம் ஆண்டு செயல்படுத்தப்படும். கொரோனா காரணமாக இதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ககன்யான் திட்டத்தை நிறைவேற்றியவுடன், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பிய அமெரிக்கா, சீனா, ரஷியா ஆகிய நாடுகள் பட்டியலில் 4-வது நாடாக இந்தியா இணையும்.

அதற்கு முன்பாக, அடுத்த ஆண்டு 2 தடவை ஆளில்லா விண்கலங்கள் விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்படும். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு தடவையும், ஆண்டு இறுதிக்குள் மற்றொரு தடவையும் அனுப்பி வைக்கப்படும்.

வாயுமித்ரா என்ற ரோபோ, விண்கலத்துடன் இணைத்து அனுப்பப்படும். இதற்கான திட்டமிடல் நடந்து வருகிறது. வேறு சில திட்டங்களும் திட்டமிடப்பட்டு வருகின்றன. 2023-ம் ஆண்டு வெள்ளி கிரகத்துக்கு அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்படும். 2022-2023 நிதியாண்டில் ஆதித்ய சோலார் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். 2030-ம் ஆண்டுக்குள் விண்வெளி நிலையத்தை நாம் உருவாக்கி விடுவோம். அது தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கும். இந்தியா இதுவரை 34 நாடுகளை சேர்ந்த 42 செயற்கைகோள்களை அனுப்பி வைத்துள்ளது. இதன்மூலம் 5 கோடியே 60 லட்சம் டாலர் வருவாய் ஈட்டி உள்ளது என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com