பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையில் இருசக்கர வாகனம், ஆட்டோக்களுக்கு தடை

பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையில் இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு வருகிற 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையில் இருசக்கர வாகனம், ஆட்டோக்களுக்கு தடை
Published on

பெங்களூரு:-

இருசக்கர வாகனங்கள்

பெங்களூரு-மைசூரு இடையே 119 கிலோ மீட்டர் தூரத்திற்கு 10 வழி விரைவுச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதில் 6 வழி பிரதான சாலையாகவும். இருபுறமும் தலா 2 வழிச்சாலை சர்வீஸ் சாலையாகவும் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பிரதான சாலையில் பயணிக்கும் வாகனங்கள் சுங்கவரி செலுத்த வேண்டும். அந்த சாலையில் 2 இடங்களில் சுங்கச்சாவடி செயல்படுகிறது. இந்த விரைவுச்சாலையை கடந்த மார்ச் மாதம் 12-ந் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

இந்த சாலை திறக்கப்பட்டு 4 மாதங்கள் தான் ஆகிறது. ஆனால் இந்த காலக்கட்டத்தில் 350-க்கும் மேற்பட்ட விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதில் சுமார் 160 பேர் உயிரிழந்துள்ளனர். சாலை நன்றாக இருப்பதால் வாகன ஓட்டிகள் வேகமாக வாகனங்களை இயக்குகிறார்கள். இதனால் விபத்துகள் ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. மேலும் இருசக்கர வாகனங்கள், டிராக்டர்கள், ஆட்டோக்கள் மற்றும் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் அந்த சாலையில் மெதுவாக செல்கின்றன. இவற்றின் காரணமாகவும் விபத்துகள் நடைபெறுவதாக அதிகாரிகள் கூறுகிறார்கள்.

1-ந் தேதி முதல் அமல்

இந்த நிலையில் பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையில் இருசக்கர வாகனங்கள், சைக்கிள்கள் மற்றும் ஆட்டோக்கள் உள்பட மூன்று சக்கர வாகனங்கள், டிராக்டர்கள், மோட்டார் இல்லாத வாகனங்கள், மல்டி ஆக்சில் ஹைட்ராலிக் வாகனங்களுக்கு தடை விதித்து தேசியநெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவு வருகிற 1-ந் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் சர்வீஸ் சாலையில் செல்லலாம். அதற்கு எந்த தடையும் இல்லை. சர்வீஸ் சாலையை பயன்படுத்தும் வாகனங்கள் சுங்க கட்டணம் செலுத்த தேவை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com