பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையில் இருசக்கர வாகனம்,ஆட்டோக்களுக்கு இன்று முதல் தடை

பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையில் இன்று (திங்கட்கிழமை) முதல் இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையில் இருசக்கர வாகனம்,ஆட்டோக்களுக்கு இன்று முதல் தடை
Published on

பெங்களூரு:

பெங்களூரு-மைசூரு இடையே 119 கிலோ மீட்டர் தூரத்திற்கு 10 வழி விரைவுச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த விரைவுச்சாலையை பிரதமர் மோடி கடந்த மார்ச் மாதம் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த விரைவுச்சாலையால் பெங்களூருவில் இருந்து 1 மணி நேரத்தில் மைசூருவுக்கு சென்றடைய முடியும். ஆனால் அந்த சாலையில் வாகனங்கள் அதிவேகத்தில் செல்வதால், இதுவரை 500-க்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்துள்ளன. இதில் சுமார் 160 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்துகளை தடுக்கும் நோக்கத்தில் பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையில் இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், டிராக்டர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பிறப்பித்துள்ள இந்த உத்தரவு இன்று (திங்கட்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. பிரதானமாக உள்ள 6 வழிச்சாலையை இந்த வாகனங்கள் பயன்படுத்த முடியாது. அதன் இருபுறமும் உள்ள சர்வீஸ் சாலையை அந்த வாகனங்கள் பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாகனங்கள் பிரதான சாலைக்குள் நுழைவதை தடுக்கும் பொருட்டு 9 இடங்களில் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். இதையும் மீறி பிரதான சாலைக்குள் தடை செய்யப்பட்ட வாகனங்கள் வந்தால், அவற்றுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்து போலீசார் கூறியுள்ளனர்.

தடை செய்யப்பட்ட வாகனங்கள் குறித்து அந்த விரைவுச்சாலையில் நுழையும் பகுதியில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. தேசிய நெடுஞ்சாலை துறையின் இந்த நடவடிக்கையால், விரைவுச்சாலையில் விபத்துக்கள் குறையுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com