நண்பர்கள் தினத்தில் சோகம்; ரீல்ஸ் எடுத்தபோது ராட்சத அலையில் சிக்கி 2 பேர் பலி

நீத்து என்ற இளம்பெண்ணை அப்படியே கடலுக்குள் இழுத்து சென்றது.
ராட்சத அலையில் சிக்கி 2 பேர் பலி
Published on

விசாகப்பட்டினம்,

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நண்பர்கள் தினத்தை கொண்டாட கடற்கரைக்கு சென்ற இளம்பெண் மற்றும் இளைஞர் என 2 பேர் ராட்சத அலையில் இழுத்து செல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நண்பர்கள் தின கொண்டாட்டம்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் காஜுவாகா பகுதியைச் சேர்ந்த 4 பெண்கள் மற்றும் 3 ஆண்கள் என மொத்தம் 7 பேர் கொண்ட நண்பர்கள் குழுவினர், இன்று நண்பர்கள் தினத்தை கொண்டாடுவதற்காக அங்குள்ள பழைய கங்காவரம் கடற்கரைக்கு சென்றனர். அங்கு அவர்கள் கடற்கரையில் உள்ள ஆபத்தான பாறைகளின் மீது ஏறி நின்று, செல்போனில் ரீல்ஸ் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ச்சியாக பொழுதை கழித்து கொண்டிருந்தனர்.

ராட்சத அலை இழுத்தது

அப்போது, எதிர்பாராத விதமாக கடலில் எழும்பிய பயங்கர ராட்சத அலை ஒன்று, பாறையின் மீது நின்றுகொண்டிருந்த நீத்து (வயது 19) என்ற இளம்பெண்ணை அப்படியே கடலுக்குள் இழுத்து சென்றது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர் தாமோதர் (வயது 25) என்பவர், நீத்துவை காப்பாற்ற உடனடியாக கடலில் குதித்தார். ஆனால், சீறிப்பாய்ந்த கடல் அலை இருவரையும் கடலின் ஆழ பகுதிக்கு இழுத்து சென்றது.

மீட்பு முயற்சி

இதற்கிடையே கடலில் அடித்து செல்லப்பட்ட நீத்து மற்றும் தாமோதர் ஆகிய இருவரையும் கடலோர காவல் படையினரும், உள்ளூர் போலீசாரும் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில், அவர்கள் இருவரது உடல்களும் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

போலீசார் எச்சரிக்கை

நண்பர்கள் தின கொண்டாட்டத்தின் போது நேரிட்ட இந்த கொடூர விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் யாரும் கடற்கரையின் ஆபத்தான பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும், அலைகளுக்கு அருகில் நின்று செல்பி மற்றும் வீடியோக்கள் எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com