

ஐதராபாத்,
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், கடந்த ஆண்டு நவம்பர் 25, 26 ஆகிய தேதிகளில் ஐக்கிய அரபு அமீரகத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின் போது, அமீரகத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் சேக் அப்துல்லா பின் சாயீத் அல் நஹ்யானை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின் போது, மாறி வரும் தொழில்நுட்ப சூழ்நிலைகளில் இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான கூட்டு ஒத்துழைப்பு குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த நிலையில் பிப்ரவரி 26(இன்று) ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர், இந்தியாவிற்கு வருகை தர உள்ளதாக தகவல் வெளியானது. அதன்படி இந்தியாவிற்கு இன்று வருகை தந்த சேக் அப்துல்லா பின் சாயீத் அல் நஹ்யான், ஐதராபாத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின்போது இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று மாலை சேக் அப்துல்லா பின் சாயீத், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு திரும்ப உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.