உத்தரகாண்ட்: பொது சிவில் சட்ட மசோதாவில் இருக்கும் அம்சங்கள் என்ன? முழு விவரம்

திருமணம், விவாகரத்து , நிலம், சொத்து, உள்ளிட்ட சிவில் விவகாரங்களில் அனைத்து மதத்தினருக்கும் ஒரே மாதிரியான சட்டமே பொருந்தும் என மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட்: பொது சிவில் சட்ட மசோதாவில் இருக்கும் அம்சங்கள் என்ன? முழு விவரம்
Published on

டேராடூன்,

நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இதற்கான பணிகளை சட்ட ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், சுதந்திர இந்தியாவில் முதல் மாநிலமாக உத்தரகாண்ட் தனது சட்டப்பேரவையில் பொது சிவில் சட்டத்தை தாக்கல் செய்துள்ளது.

இந்த மசோதா குறித்து ஆய்வு செய்ய போதுமான கால அவகாசம் கொடுக்காமல் நிறைவேற்ற அரசு திட்டமிடுவதாகவும், இது சட்ட நடைமுறைக்கு எதிரானது என்றும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் யஷ்பால் ஆர்யா குற்றம் சாட்டியுள்ளார்.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதை அடுத்து குறுக்கிட்டுப் பேசிய சபாநாயகர் ரிது கந்தூரி, இந்த மசோதா குறித்து ஆய்வு செய்ய போதுமான கால அவகாசம் வழங்கப்படும் என்றும், அதன் பிறகே மசோதா வாக்கெடுப்புக்கு விடப்படும் என்றும் உறுதி அளித்தார். இதையடுத்து, எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் சமாதானம் அடைந்தனர். இதற்கிடையே, பொதுசிவில் சட்டத்தில் இருக்கும் முக்கிய அம்சங்கள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. இது குறித்து பார்க்கலாம்.

பலதார திருமணங்களுக்கு தடை, மகன்களுக்கும் மகள்களுக்கும் சமமான சொத்துப் பங்கீடு, திருமண உறவில் பிறந்த குழந்தைகள் மற்றும் திருமண உறவுக்கு அப்பால் பிறந்த குழந்தைகளுக்கு இடையிலான வேறுபாடு நீக்கப்பட்டுள்ளது. இறப்புக்குப் பிறகு சமமான சொத்துரிமையை தத்தெடுக்கப்பட்ட குழந்தைக்கும் சொந்த குழந்தைக்கும் வழங்குவது என பல்வேறு விதிகள் இடம்பெற்று இருக்கின்றன.

அதேபோல லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தாலும் அதை மாவட்ட அதிகாரிகளிடம் பதிவு செய்வது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. முறைப்படி பதிவு செய்ய தவறினால் 6 மாதங்கள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். 21 வயதுக்கு குறைவானவர்கள் பெற்றோர்கள் அனுமதி பெறுவது அவசியம் ஆகும்.

லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் பெண் கைவிடப்பட்டால் உடன் வாழ்ந்த நபரிடம் பராமரிப்பு தொகையை பெறும் உரிமை பெண்ணுக்கு உண்டு. இதற்காக நீதிமன்றத்தில் முறையிட முடியும்.

திருமணம், விவாகரத்து, நிலம், சொத்து, பரம்பரை சொத்து உள்ளிட்ட சிவில் விவகாரங்களில் அனைத்து மதத்தினருக்கும் ஒரே மாதிரியான சட்டமே பொருந்தும். பழங்குடியினருக்கு மட்டும் இதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com