மத்திய மந்திரி நாராயண் ரானே பேச்சுக்கு உத்தவ் தாக்கரே பதிலடி

விமான நிலைய திறப்பு விழாவில் மத்திய மந்திரி நாராயண் ரானேவுக்கும், முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கும் இடையே ஏற்பட்ட வார்த்தை மோதலால் பரபரப்பு ஏற்பட்டது.
மத்திய மந்திரி நாராயண் ரானே பேச்சுக்கு உத்தவ் தாக்கரே பதிலடி
Published on

ரானே தாக்கு

மராட்டிய மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் சிப்பி விமான நிலையம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் அரசியலில் பரம எதிரிகளாக கருதப்படும் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, மத்திய சிறு, குறு தொழில் துறை மந்திரி நாராயண் ரானே கலந்துகொண்டனர். மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி ஜோதிர்ஆதித்ய சிந்தியாவும் பங்கேற்றார். நாராயண் ரானே சிவசேனாவில் இருந்து விலகி சென்ற பிறகு, அவரும் உத்தவ் தாக்கரேவும் ஒரே மேடையில் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும்.இந்த, விழாவில் பேசிய நாராயண் ரானே, 1990-ல் அவர் எம்.எல்.ஏ. ஆனது முதல் சிந்துதுர்க் மாவட்டத்தில் செய்த மேம்பாட்டு திட்டங்களை பட்டியலிட்டார். அவரின் முயற்சிகளால் தான் சிந்துதுர்க்கில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டதாக கூறினார்.இதேபோல உத்தவ் தாக்கரேயை தாக்கும் வகையில் அவர், மறைந்த தலைவர் பால்தாக்கரேவுக்கு பொய் பேசினால் பிடிக்காது, என்றார்.

உத்தவ் பதிலடி

இதற்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அவரது உரையில் பதிலடி கொடுத்தார். அவர் பேசும்போது, பால் தாக்கரேவுக்கு பொய் பேசினால் பிடிக்காது. எனவே தான் பல சமயங்களில் அதுபோன்றவர்கள் சிவசேனாவில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். கசப்பாக இருந்தாலும் உண்மையை சொல்லுங்கள் என பால் தாக்கரே கூறுவார் என்றார். மேலும் அவர், எனக்கு தெரிந்தவரை சிந்துதுர்க் கோட்டை மராத்திய மன்னர் சிவாஜியால் தான் கட்டப்பட்டது. அல்லது அதையும் நான் தான் கட்டினேன் என சிலர்வந்து சொல்வார்கள். எனவும் கூறினார்.

ஒரே மேடையில் மத்திய மந்திரி நாராயண் ரானேவும், உத்தவ் தாக்கரேவும் வார்த்தை மோதலில் ஈடுபட்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவை கன்னத்தில் அறைவேன் என கூறியதை அடுத்து மத்திய மந்திரி நாராயண் ரானே கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com