பிரதமருக்கு குங்குமம் அனுப்ப போவதாக உத்தவ் சிவசேனா அறிவிப்பு

இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கு உத்தவ் சிவசேனா கண்டனம் தெரிவித்து உள்ளது.
மும்பை,
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாய், அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. பஹல்காமில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த தாக்குதல் சம்பவத்தை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கு உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கண்டனம் தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து அந்த கட்சி எம்.பி. சஞ்சய் ராவத் கூறியிருப்பதாவது:- பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக இந்தியா தொடங்கிய ஆபரேஷன் சிந்தூர் இன்றும் நடைமுறையில் உள்ளது. எனவே இந்தியா, பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாடுவது துரோகம் ஆகும். கண்டிப்பாக இந்த போட்டியை பார்க்க பா.ஜனதா மந்திரிகளின் பிள்ளைகள் செல்வார்கள். இது தேச துரோகம்.
இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெறும் ஞாயிற்றுக்கிழமை அன்று உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா சார்பில் ' சிந்தூர் ரக்சா' போராட்டம் நடைபெறும். மாநிலத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு வீட்டில் உள்ள குங்குமத்தை (சிந்தூர்) பிரதமர் மோடிக்கு அனுப்ப உள்ளனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






