

திருவனந்தபுரம்,
கேரளம் மாநில சட்டசபை தேர்தல் முடிவு கடந்த 4-ந் தேதி வெளியானது. மொத்தம் உள்ள 140 தொகுதிகளில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 102 இடங் களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதில் 63 இடங்களில் வென்ற காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.
ஆளுங்கட்சியாக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி 35 இடங்களிலும், பா.ஜனதா 3 தொகுதிகளிலும் வென்றது. காங்கிரஸின் அமோக வெற்றி மூலம் 10 ஆண்டுகளகாக நீடித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி ஆட்சி முடிவுக்கு வந்தது.
இந்தநிலையில் காங்கிரசில் முதல்-மந்திரி பதவிக்கு கட்சியின் தேசிய பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கே.சி.வேணுகோபால், கடந்த பினராயி விஜயன் ஆட்சியில் எதிர்க்கட்சி தலைவ ராக இருந்த வி.டி.சதீசன், மூத்த தலைவர் ரமேஷ் சென்னித்தலா ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவியது.
10 நாட்கள் இழுபறிக்கு பிறகு எதிர்க்கட்சி தலைவராக இருந்த வி.டி.சதீசனை முதல்-மந்திரி யாக தேர்வு செய்து காங்கிரஸ் மேலிடம் அறிவித்தது. இதையடுத்து அவர், கவர்னர் ஆர்.வி.அர்லேக்கரை சந்தித்து எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை கொடுத்து ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கும்படி கேட்டு கொண்டார். அதற்கேற்ப கவர்னரும் அழைப்பு விடுத்தார்.
இதையடுத்து முதல்-மந்திரியாக வி.டி.சதீசன் பதவி ஏற்பு விழா இன்று காலை 10 மணிக்கு திருவனந்தபுரம் சென்டிரல் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. கேரள முதல்-மந்திரியாக பதவி ஏற்றார் வி.டி.சதீசன். அவருக்கு ரகசிய காப்பும் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர் அர்லேகர்.
பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா, தெலுங்கான முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, இமாச்சல பிரதேச முதல்-மந்திரி சுக்விந்தர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்,
பதவியேற்பு விழாவில் முன்னாள் முதல்-மந்திரி பினராயி விஜயன், காங்கிரஸ் நிர்வாகி கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர் மேடையில் அமர்ந்தனர்.
கேரள முதல்-மந்திரி பதவியேற்பு விழாவில் சிறப்பு அழைப்பாளர்கள் உட்பட 1 லட்சம் பேர் வரை பங்கேற்றுள்ளனர். காங்கிரஸ் வெற்றியின் மூலம் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 10 ஆண்டு பதவிக்காலம் முடிவுக்கு வந்தது.