சபர்மதி ஆசிரமத்தை பார்வையிட்ட இங்கிலாந்து பிரதமர்..!

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் சபர்மதி ஆசிரமத்தை பார்வையிட்டு வருகிறார்.
image courtesy: ANI
image courtesy: ANI
Published on

அகமதாபாத்,

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் 2 நாள் பயணமாக இன்று இந்தியா வந்துள்ளார். இங்கிலாந்து பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் போரிஸ் ஜான்சன் இந்தியா வருவது இதுவே முதல்முறையாகும்.

இங்கிலாந்தில் இருந்து தனி விமானம் மூலம் குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்திற்கு அவர் வந்தார். போரிஸ் ஜான்சனை குஜராத் முதல்-மந்திரி புபேந்திரபட்டேல், மாநில கவர்னர் உள்ளிட்டோர் விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றனர்.

அகமதாபாத்தில் முதலீடு, வர்த்தகம் தொடர்பான விஷயங்களை போரிஸ் ஜான்சன் இன்று கவனிக்கிறார். அகமதாபாத்தில் உள்ள பல்கலைக்கழகத்திற்கு செல்லும் போரிஸ் ஜான்சன் சில கலாசார இடங்களையும் பார்வையிட திட்டமிட்டுள்ளார்.

அந்த வகையில் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்திற்கு சென்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பார்வையிட்டார். அங்கு உள்ள ராட்டையை போரிஸ் ஜான்சன் சுழற்றி மகிழ்ந்தார்.

அவருக்கு சபர்மதி ஆசிரமம் சார்பில் தொடக்கத்தில் காந்தி எழுதிய புத்தகமான 'கைடு டூ லண்டன்' (Guide to London) என்ற புத்தகமும் காந்தியின் சீடர்களில் ஒருவரான மேடலின் சிலேடு எழுதிய 'தி ஸ்பிரிட்ஸ் பில்கிரிமேஜ்' (The Spirit's Pilgrmage) என்ற புத்தகமும் பரிசாக வழங்கப்பட்டது.

அகமதாபாத் பயணத்தை முடித்துக்கொண்டு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் நாளை டெல்லியில் இந்திய பிரதமர் மோடியை சந்திக்கிறார். போரிஸ் ஜான்சன் - மோடி இடையேயான சந்திப்பின்போது இருநாட்டுகளுக்கு இடையே வர்த்தகம், பாதுகாப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து ஆலோசிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com