

புதுடெல்லி,
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற பெருமைக்குரிய நமது நாட்டில் பொதுத்தேர்தல் வரவுள்ள நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடர் கடந்த மாதம் 31-ந் தேதி தொடங்கியது.
முதல் நாளில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை ஆற்றினார். அவர் மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசின் சாதனைகளை பட்டியலிட்டார்.
அப்போது அவர், கடந்த 4 ஆண்டு கால ஆட்சியில் நாட்டு மக்களிடையே புதிய நம்பிக்கையை இந்த அரசு ஏற்படுத்தி உள்ளது. நாட்டின் செல்வாக்கை உயர்த்திக் காட்டியது. சமூக, பொருளாதார மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இதன்மூலம் மக்களின் அளவிட முடியாத நேசத்தையும், நம்பிக்கையையும் அரசு பெற்றது. ஒவ்வொரு இந்தியனின் வாழ்க்கையையும் உயர்த்துவதுதான் அரசின் முக்கிய இலக்கு என குறிப்பிட்டார்.
ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நாடாளுமன்ற மக்களவையில் நேற்றுமுன்தினம் விவாதம் தொடங்கியது. நேற்றுடன் விவாதம் முடிந்தது. விவாதத்துக்கு பதில் அளித்து பிரதமர் நரேந்திர மோடி ஆவேசமாக உரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஒரு அரசு என்றால் அது இந்திய மக்களுக்காக உழைக்க வேண்டும். மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நடக்க வேண்டும். ஊழலுக்கு இடம் தரக்கூடாது.
நிறைய பேர் இந்த அரசை விமர்சிக்கலாம். ஆனால் சிலர் மட்டும்தான் மாற்றத்தை கொண்டு வருவதற்கான உறுதியை கொண்டுள்ளனர்.
எங்கள் ஆட்சியின் மீது (காங்கிரஸ் கட்சியினர்) குறை கூறினார்கள். ஆனால் அவை யாவும் அடிப்படை ஆதாரம் அற்றவை.
காங்கிரசில் உள்ள நமது நண்பர்கள் இந்தியாவை இரண்டு கால கட்டங்களாக பிரித்துப் பார்க்கிறார்கள். ஒன்று பி.சி., அதாவது காங்கிரசுக்கு முந்தைய காலம். அப்போது எதுவுமே நடக்கவில்லை; ஏ.டி., அதாவது குடும்ப ஆட்சி வந்தபின்னர்தான் எல்லாமே நடந்துள்ளது என்று காங்கிரசார் கருதுகிறார்கள்.
நாங்கள் சவால்களைக் கண்டு ஓடி விடவில்லை. நாங்கள் சவால்களை சந்திக்கிறவர்கள். மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்காக முழு பலத்தையும் பயன்படுத்தி உழைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் லண்டனுக்கு போய் பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். எதற்காக? இந்தியாவை மோசமாக காட்டுவதற்காக.
மோடியை குறை கூறுவதற்கு உங்களுக்கு அனுமதி உண்டு. ஆனால் நீங்கள் அப்படி செய்கிறபோது சிலர் இந்தியாவை விமர்சிக்க தொடங்கி விடுவார்கள்.
எங்கள் ஆட்சிக்காலத்தில் முதலீடு, உருக்கு, ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், பால், விவசாயம், விமான போக்குவரத்து என எல்லா துறைகளிலும் இப்போது இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்தியா கடந்த 4 ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க அளவுக்கு சிறப்பான முன்னேற்றத்தை கண்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி தேர்தல்களில் தோல்வி அடைந்து விட்டு, அதற்கு மின்னணு வாக்கு எந்திரங்களை குறை சொல்கிறது. திட்டக் கமிஷனை கோமாளிகளின் கூட்டம் என்கிறார்கள்.