

புதுடெல்லி,
கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து பெரும்பாலான நாடுகளில் விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. அதனால், அங்கு சிக்கித்தவித்த இந்தியர்களை அழைத்துவர வந்தே பாரத் திட்டம் தொடங்கப்பட்டது. அதன்படி, கடந்த மே 7-ந்தேதியில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 13 லட்சத்து 74 ஆயிரம் இந்தியர்கள் அழைத்துவரப்பட்டுள்ளனர்.
அவர்கள் ஏர் இந்தியா, தனியார் விமானங்கள், வெளிநாட்டு விமானங்கள், தனி விமானங்கள், கடற்படை கப்பல்கள், சாலை மார்க்கம் என பல வழிமுறைகளில் அழைத்துவரப்பட்டனர். தற்போது, வந்தே பாரத் திட்டத்தின் 6-வது கட்டம் நடந்து வருகிறது.
இதில், 1,007 சர்வதேச விமானங்களை இயக்கவும், 2 லட்சத்துக்கு மேற்பட்டோரை மீட்டு வரவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இத்தகவல்களை மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா இணையம் வழியாக அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.