

புதுடெல்லி,
கேரளாவில் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வர மறுக்கிறது. நாட்டிலேயே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலமாக தற்போது கேரளாதான் உள்ளது. அங்கு தினசரி தொற்று பாதிப்பு விகிதம் 10 சதவீதத்திற்கும் மேல் உள்ளது. தொற்று பரவல் கடந்த சில நாட்களாக அதிகரிக்கத் தொடங்கியிருப்பது அங்குள்ள மக்களை கலக்கம் அடையச்செய்துள்ளது.
இந்த நிலையில், பக்ரீத் பண்டிகை காரணமாக கேரளாவில் 3 நாட்களுக்கு ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, கேரளாவில் ஞாயிறு முதல் செவ்வாய் வரை துணிக் கடைகள், நகைக் கடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் கடை, பரிசுப் பொருட்கள் கடை உள்ளிட்டவற்றை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தொற்று பாதிப்பு அதிமாக காணப்படும் நிலையில், ஊரடங்கில் தளர்வுகள் அறிவித்து இருப்பதற்கு இந்திய மருத்துவ சங்கம் அதிருப்தி தெரிவித்துள்ளது. இந்திய மருத்துவ சங்கம் இது தொடர்பாக கூறியிருப்பதாவது:- உத்தர பிரதேசம், ஜம்மு காஷ்மீர், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்கள் பாரம்பரியமான மற்றும் பிரசித்தி பெற்ற யாத்திரைகளை ரத்து செய்துள்ளன. ஆனால், கேரளா ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்திருப்பது துரதிருஷ்டவசமானது. இந்த தளர்வுகள் மக்கள் அதிக அளவில் கூட்டமாக கூடுவதற்கு வழிவகுக்கும்.
இந்த உத்தரவை வாபஸ் பெறாவிட்டால் அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டிய கட்டாயம் ஏற்படும். தற்போதைய மருத்துவ அவசர நிலை சூழலில், தளர்வுகளை அறிவித்திருக்கும் பினராயி விஜயனின் அரசின் செயல் தேவையற்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.