அழைப்பே இல்லாமல்... திருமண விருந்துக்கு வந்த சிறுத்தைப்புலி; காருக்குள் புகுந்து உயிர் தப்பிய மணமக்கள்
உத்தர பிரதேசத்தில் திருமண விருந்து நிகழ்ச்சியில் திடீரென சிறுத்தைப்புலி நுழைந்த அதிர்ச்சி வீடியோ வைரலாகி வருகிறது.
லக்னோ,
உத்தர பிரதேசத்தின் தலைநகர் லக்னோவில் புத்தேஷ்வர் சாலை பகுதியில் நேற்றிரவு திருமண விருந்து நிகழ்ச்சி ஒன்று நடந்து கொண்டிருந்தது. விருந்தினர்கள் பலர் சாப்பிடுவதற்காக அந்த அறையில் கூடியிருந்தனர். அப்போது, சிறுத்தைப்புலி ஒன்று திடீரென உள்ளே நுழைந்தது.
இதனை பார்த்ததும் விருந்தினர்கள் அனைவரும் அச்சத்தில், உயிரை காப்பாற்றிக்கொள்ள அலறியடித்தபடி தப்பியோடினர். இந்த தகவல் அறிந்ததும், மணமக்களும் பயத்தில், திருமண அரங்கில் இருந்து ஓடிச்சென்று காருக்குள் புகுந்து கொண்டனர்.
இந்த விசயம் அறிந்து போலீசார், வனத்துறை அதிகாரிகள் உடனடியாக சம்பவ பகுதிக்கு சென்றனர். பல மணிநேரம் போராடி சிறுத்தைப்புலியை அவர்கள் பிடித்தனர். அதற்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. எனினும், அதனை பிடிக்கும் முயற்சியில், வன அதிகாரி முக்காதர் அலிக்கு கையில் காயங்கள் ஏற்பட்டன.
சிறுத்தைப்புலியை பிடிக்கும் வரை, மணமக்களின் குடும்பத்தினரும் பாதுகாப்பிற்காக அவரவர்களுடைய வேன் உள்ளிட்ட வாகனங்களில் தஞ்சமடைந்தனர். இதுபற்றிய வீடியோ ஒன்றும் வைரலானது. அதில், அதிகாரியின் கையில் இருந்த ஆயுதம் ஒன்றை சிறுத்தைப்புலி பறித்து, தள்ளி விட்டு தப்பிக்கும் காட்சிகள் உள்ளன.
இந்த சம்பவத்தில் ஆளும் பா.ஜ.க. அரசை சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கடுமையாக சாடியிருக்கிறார். அரசில் காணப்படும் ஊழலால், வனத்தில் மனித ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது என கூறியுள்ளார்.
இந்த சம்பவம் வருத்தம் தருகிறது. இதனால், பொதுமக்களின் வாழ்வு ஆபத்தில் உள்ளது. இதுபற்றி ஏதேனும் நடவடிக்கை எடுப்பார்களா? அல்லது அது சிறுத்தைப்புலியே அல்ல. ஒரு பெரிய அளவிலான பூனை என்று கூறி, செய்தியையே மறைத்து விடுவார்களா? என்றும் கேட்டுள்ளார்.








