5ஜி அலைக்கற்றை ஏலத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

5ஜி தொலைதொடர்பு சேவைக்கான அலைக்கற்றைகளை ஏலம் விட மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
5ஜி அலைக்கற்றை ஏலத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் முற்றிலும் உள்நாட்டில் '5ஜி' என்று அழைக்கப்படுகிற 5-ம் தலைமுறை தொலைதொடர்புச் சேவை உருவாக்கப்பட்டுள்ளது. இது செல்போன் வாடிக்கையாளர்களுக்கு அதிகளவிலான செயல்திறனை வழங்க உறுதி அளிக்கிறது.

இந்த தொலை தொடர்புச்சேவையின்கீழ் இணையதளம் அதிவேகமாக செயல்படும். குறிப்பாக தற்போது பயன்பாட்டில் உள்ள 4-ஜி தொலைதொடர்புச் சேவையின் இணையதள வேகத்தை விட இந்த 5ஜி தொலைதொடர்புச்சேவை இணையதள வேகம் பல மடங்கு அதிகமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

அலைக்கற்றைகள் ஏலம்

இந்த 5ஜி அலைக்கற்றைகள் ஏலம் நடத்துவதற்கு பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடந்த மத்திய மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

மேலும் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் பிரத்யேக 5ஜி நெட்வொர்க்குகளை அமைக்கவும் மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

20 வருடங்களுக்கானது

5ஜி அலைக்கற்றை ஏலம் தொடர்பான முக்கிய தகவல்கள் வருமாறு:-

* 72 ஜிகா ஹெர்ட்ஸ்சுக்கும் அதிகமான அலைக்கற்றைகள் அடுத்த மாத இறுதியில் ஏலம் விடப்படும். இந்த ஏலம் 20 வருடங்களுக்கானது.

* 5-ஜி அலைக்கற்றை ஏலம் அடுத்த மாதம் 26-ந் தேதி தொடங்குகிறது.

* இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) பரிந்துரைத்துள்ள ரிசர்வ் விலையில் ஏலம் விடப்படும்.

* செல்போன் சேவைகளுக்கான 5ஜி அலைக்கற்றை விற்பனைக்கான கையிருப்பு அல்லது தரை விலையில் 39 சதவீதத்தினை குறைக்க டிராய் முன்பு பரிந்துரை செய்தது.

* பாரதி ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ போன்ற தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களுக்கு 9 அதிர்வெண் பேண்டுகளில் 5ஜி அலைக்கற்றைகள் ஏலம் விடப்படும்.

* பெரிய தொழில் நிறுவனங்களுக்கான நேரடி ஓதுக்கீடு, கோரிக்கை ஆய்வு மற்றும் டிராய் பரிந்துரைகள் படி விலை, ஒதுக்கீட்டுமுறைகள் பின்பற்றப்படும்.

* வெற்றிகரமான ஏலதாரர்களுக்கு 5ஜி சேவைகளை பொது மற்றும் நிறுவனங்களுக்கு வழங்குவதற்காக அலைக்கற்றைகள் ஒதுக்கப்படும்.

* பல்வேறு குறைந்த அளவிலான (600 மெகா ஹெர்ட்ஸ், 700 மெகா ஹெர்ட்ஸ், 800 மெகா ஹெர்ட்ஸ், 900 மெகா ஹெர்ட்ஸ், 1800 மெகா ஹெர்ட்ஸ், 2100 மெகா ஹெர்ட்ஸ், 2300 மெகா ஹெர்ட்ஸ்), மிட் (3300 மெகா ஹெர்ட்ஸ்) மற்றும் உயர் (26 ஜிகாஹெர்ட்ஸ்) அலைவரிசைகளில் அலைக்கற்றை ஏலம் விடப்படும்.

தவணை முறையில் தொகை

* ஏலம் எடுக்கிற ஏலதாரர்கள் முன்பணம் செலுத்த வேண்டிய கட்டாயம் இல்லை. அலைக்கற்றை கட்டணங்களை 20 சம வருடாந்திர தவணைகளில் செலுத்தலாம். ஒவ்வொரு ஆண்டும் தொடக்கத்தில் முன்கூட்டியே செலுத்தலாம்.

* ஏல தாரர்கள் 10 ஆண்டுகளுக்கு பிறகு அலைக்கற்றைகளை திரும்ப ஒப்படைக்க வாய்ப்பு வழங்கப்படும். ஏலத்தில் பெறப்படுகிற அலைக்கற்றைகளுக்கு பயன்பாட்டு கட்டணம் கிடையாது.

* ஏல விண்ணப்பங்களை அடுத்த மாதம் 8-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

5ஜி அலைக்கற்றை ஏலத்தில் நாட்டின் முன்னணி தொலைதொடர்புச் சேவை நிறுவனங்களான வோடபோன் ஐடியா, ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ போன்ற நிறுவனங்கள் பங்குபெறும் எனவும், 5ஜி தொலைதொடர்புச்சேவை தகவல் தொழில்நுட்பத்துறையில் பெரிய புரட்சியை கொண்டு வரும் எனவும் எதிர்பார்ப்பு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com